வியாழன், 13 ஜூன், 2013

வாழ்வில் சிலநேரம்...

வாழ்வில் சிலநேரம்  சிலர் எப்போதோ நமக்கு எதிராக நடப்பதுண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் நமக்கு எதிரிகள் அல்லர்.
சில நேரம், நம்மைக் கால் நீட்டிக் கவிழ்த்தவர்களே நம்மைக் கைகொடுத்து தூக்கி விடுபவர்களாகவும் மாறக்கூடும்.

வாழ்வில் சிலநேரம்  கோபப்படும்படி நேரும். ‍கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் ‍கோபப்படும் உரிமை நமக்கு உண்டு. ஆனால், கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் கொடூரமாக நடந்துகொள்ள நமக்கு ஒருபோதும் உரிமையில்லை.

வாழ்வில் சிலநேரம்  நம்மேல் அடர்த்தியான அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவர்களின் ‍அன்பும் பிரார்த்தனைகளும் நம் கவசமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாமலே போகலாம்.

வாழ்வில் சிலநேரம்   நாம் நினைத்தது நடக்காமல் போகலாம். ஆனால், வாழ்வில் நமக்குத் தேவையானது நிச்சயம் நடந்து கொண்டிருக்கிறது. ‍அந்த நன்றியுணர்வு அரும்பினால் வாழ்க்கையின் முழுமையான நன்மைகள் நம் வசமாகும்.

வாழ்வில் சிலநேரம்  உள்ளத்தை நொறுக்கும்படியான சம்பவங்கள் நிகழும். நம் துயரத்திற்காக உலகம் நின்று விடாது என்பதை உணர்ந்தால் நம்முடைய பயணங்கள் தொடரும்.

வாழ்வில் சிலநேரம்  நண்பர்களின் மனநிலைகள் மாறும். இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் நண்பர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நேரும்.

வாழ்வில் சிலநேரம்   சில ரகசியங்களை அறிந்றுகொள்ள முடியாமலேயே போகும். அவற்றை அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகவே இருக்கும்.

வாழ்வில் சிலநேரம்  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிவரும். தவறினால், அந்த உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்.

வாழ்வில் சிலநேரம்  கடுமையான முடிவுகளை எடுக்க நேரும். ‍அந்த முடிவின் அழுத்தத்தை மனதிலிருந்று அகற்றுவதற்கே முதலிடம் தர வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக