சனி, 25 மே, 2013

வெற்றிக் கதைகள் 3

'ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள் என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள், கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள், கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. கிராமத்தில்தான் வசிக்கிறார் ஷிஜி. என்றாலும், இவருக்குச் சொந்தமாகவோ, வீட்டைச் சுற்றியோ நிலம் கிடையாது.

தவிர, கிராமம் முழுக்க ரப்பர் சாகுபடிதான் பிரதானம் என்பதால் மொட்டைமாடியில் தோட்டம் போட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து, இயற்கைப் பாசத்தை பலருக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஷிஜியின் வீடு. காலைவேளையில் இவரை நாம் சந்திக்கச் சென்றபோது, மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார், ஷிஜி. அவருக்கு உதவியாக மகன் அபி.மலையாளம் கலந்த தமிழில் உற்சாகமாகவே பேச்சைத் துவங்கிய ஷிஜி. இவர் கணவர் அணில்குமார், பில்டிங் கான்ட்ராக்டர். இவர் வீட்டுலயே டெய்லரிங் ஷாப் வைத்திருக்கிறார்.

இவர்களுக்கு விவசாய நிலம் இல்லை. முன்பு சந்தையில்தான் காய்கறிகளை வாங்கியிருக்கிறார்கள். இவர் கணவர், இந்த காய்கறிகள் ரசாயன உரத்தில் விளைந்தது. உடலுக்குக் கேடுதான் வரும் என்று அடிக்கடி ஆதங்கப்படுவார். அதனால்தான், 'நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் என்ன?’ என்று யோசித்திருக்கிறார். அதற்குப்பிறகு தான் மொட்டைமாடியில் தோட்டம் போட்டுள்ளார். ஐந்து வருடமாக இந்தத் தோட்டம்தான் இவர்களுக்கு காய்கறிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக  பெருமையோடு சொன்னவர், மொட்டைமாடி விவசாய அனுபவங்களை எடுத்து வைத்தார்.

காய்கறி முதல் கீரை வரை
இவர் மாடியின் பரப்பளவு 900 சதுரடி. முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பயறு வகைகள், முள்ளங்கி, மல்லி, கத்திரிக்காய், வழுதலங்காய், சின்னவெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள்னு எல்லாமே இங்கு விளைகிறது. மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம் போட்டால், தண்ணீர் இறங்கி கட்டிடத்துக்கு பாதிப்பு வந்திடும் என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அதனால், நான்கடி இடைவெளியில் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதுற்கு மேல் பலகைகளை வைத்து அதன் மேல்தான் தொட்டியில் செடிகளை வைத்திருக்கிறார். கல்லுக்குப் பதிலாக கொட்டாங்குச்சிகளை வரிசையாக அடுக்கி வைத்தும் பலகைகளைப் போட்டிருக்கிறார்.  
மண்தான் பிரதானம்
வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்தில் மண்ணை அள்ளிட்டு வந்து போடக்கூடாது. இவர் செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து தொட்டியில் போட்டிருப்பதால் நல்ல இயற்கை உரமாக இருக்கிறது. இவர் ஊரு சந்தையில் இருக்குற கடையிலேயே விதைகள் கிடைக்கிறது.

ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு விதம்
ஒவ்வொரு விதையையும் விதைக்கறதுக்கு சில வழிமுறைகள் இருக்கிறது. வெண்டை விதையை வெள்ளைத் துணியில் கட்டி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, அப்படியே மூன்று நாட்கள் வைத்தால் முளை விட்டுடும். அதைத்தான் தொட்டியில் விதைக்க வேண்டும். காலை நேரத்தில்தான் கீரை விதைகளை விதைக்க வேண்டும். முட்டைக்கோஸ் பயிரில் வாழை மாதிரியே பக்கக்கன்று வரும். மூன்று மாதத்தில் முட்டைக்கோஸ் அறுவடை முடிந்ததும், அதே இடத்தில் பக்கக்கன்றை வளர விடாமல் வேறு இடத்தில் புது மண் மாற்றி நடவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும் மாடித் தோட்டத்தில் மகசூலை அள்ளிடலாம' என்ற ஷிஜி பராமரிப்பு முறைகள் பற்றியும் பகிர்ந்தார்.
வாரம் ஒரு முறை தொழுவுரம்
பக்கத்து வீட்டில் மாடு வளர்கிறார்கள். அவர்களிடம் தொழுவுரம் வாங்கி, ஒவ்வொரு தொட்டிக்கும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு கையளவு தொழுவுரம் போடுவார். வீட்டில் அடிக்கடி மீன் சாப்பிடுவார்களாம். அதனால், தலை, வால் என்று மீன்கழிவுகள் தாராளமாக் கிடைக்கும். அந்தக் கழிவுகளையும் ஒவ்வொரு தொட்டியிலயும் கையளவு போட்டு மூடி வைத்து விடுவதாக கூறுகிறார். அது போலவே முட்டை ஓடுகளையும் போடுவதாக கூறுகிறார். அதனால் காய்கறிச் செடிகள் வஞ்சனையில்லாமல் காய்க்கிறது என்ற ஷிஜி நிறைவாக, இவர் வீட்டுக்குக் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கி வருடத்திற்கும் மேல் ஆகிறது. தினமும் மாலை நேரம் மாடியில் ஒரு சுற்று வந்து செடிகளைப் பாத்தால் அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாமல் போய்விடுவதாக கூறுகிறார். இயற்கை முறையில் விளைவதால் உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்தில் இவர் உடம்பையும் மனதையும் இந்த மாடித்தோட்டம் ஆரோக்கியமாக வைத்திருகிகறது என்றபடி சந்தோஷமாக விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,   
ஷிஜி,
செல்போன்: 77087-81763.

''கூட்டு மரங்களால் கூடுதல் லாபம்!''

தேதி : 25.03.2012
தானே’ புயலின் கோர தாண்டவத்தால், கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதத்துக்குள்ளாகிக் கிடக்கின்றன பலா, முந்திரி மரங்கள். தப்பிப் பிழைத்திருக்கும் மரங்களைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக இயற்கை விவசாய வல்லுநர்கள் மூன்று பேரை 'பசுமை டாக்டர்'களாக அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றது 'பசுமை விகடன்'. மரங்களைத் தொடர்ந்து பராமரிப்பது, புதிய கன்றுகளை நடுவது, இயற்கை முறையிலேயே பராமரித்து நல்ல லாபத்தை ஈட்டுவது தொடர்பாக, 'பசுமை டாக்டர்'கள் மூவரும் தந்த ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன.

குருணை மருந்து கூடாது
ஐம்பது ஆண்டுகளாக முந்திரி சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் கூடியிருந்த முந்திரி விவசாயிகளுக்குச் சொன்ன ஆலோசனைகளைப் பாடமாகவே தொகுத்திருக்கிறோம். அவை- 'கோடைக் காலத்தில் முந்திரிச் செடிகளை நடவு செய்யக் கூடாது. மழை கிடைக்கும் மாதங்களான ஆடி, ஆவணிதான் நடவுக்கு ஏற்றவை. ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள், நடவின்போது குருணை மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்கள் இறந்து விடுகின்றன. இது மகசூலை பாதிக்கும். எனவே, குருணை மருந்தைத் தவிர்த்துவிட வேண்டும். நடவு செய்யும் குழிகளில், தலா 2 கிலோ மண்புழு உரம் அல்லது ஒரு கூடை தொழுவுரம் இட்டு சிறிய சருகுகள், சின்னச்சின்ன குச்சிகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் வேப்பங்கொட்டைத் தூள் இட்டு முந்திரிக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

12 அடி இடைவெளி
முந்திரியைப் பொறுத்தவரை நாட்டுச்செடிகளைவிட, ஒட்டுச் செடிகள்தான் நன்கு காய்க்கின்றன. அதனால், ஒட்டுச் செடிகளைத் தேர்வு செய்வது நல்லது. ஏற்கெனவே உள்ள மரங்களுக்கு இடையே 10 அடி இடைவெளி கொடுத்துத்தான் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். புதிதாக நடவு செய்வதாக இருந்தால், 12 அடி இடைவெளி தேவை. ஒட்டு முந்திரி, மூன்று அல்லது நான்கு வருடங்களில் காய்ப்புக்கு வந்து விடும். ஆனால், மரங்கள் நன்கு நெருக்கமாக வளர்ந்து அதிகளவில் காய்க்க, கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிடும். அதுவரை கிடைக்கிற மகசூலை எடுத்துக் கொண்டு, பூச்சிகளால் தாக்கப்படும் மரங்கள், சரியாகக் காய்க்காத மரங்கள் அனைத்தையும் கழித்துவிட வேண்டும்.

கூட்டு மரங்களால் கூடுதல் லாபம்
முழுக்க முந்திரி மரங்களை மட்டும் நம்பி இருக்காமல், அவற்றுக்கு இடையில் வேம்பு, தேக்கு, வேங்கை, செம்மரம் (செஞ்சந்தனம்) போன்ற மரங்களை நடலாம். 20 வருடங்கள் கழித்து, ஒரு செம்மரம், ரூபாய் 1 லட்சத்துக்கு விலை போகும். மற்ற ஒவ்வொரு மரமும் 20 வருடங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகும்.கடலூர் மாவட்டம் வறட்சிப் பகுதியாக இருந்தாலும், பெரும்பாலும் யாரும் மழைத் தண்ணீரைத் தேக்கி வைப்பதில்லை. ஐம்பதடி இடைவெளியில் வரிசையாக வரப்பு கட்டி, மழை நீரைத் தடுத்துத் தேக்கி வைக்கலாம். அதனால், நிலத்தடி நீர் பெருகுவதோடு, மரங்களின் விளைச்சலும் அதிகமாகும். மாதம் ஒருமுறை, 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து தெளித்துவிட வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இதேபோல பஞ்சகவ்யாவையும் தெளித்துவிட வேண்டும். இதனால், பூச்சித்தாக்குதல் குறைவதோடு, காய்ப்பும் அதிகரிக்கும். வருடத்துக்கு ஒரு முறை தொழுவுரம் வைக்க வேண்டும்.

காற்றைத் தடுக்க மூங்கில்
வரும்காலங்களில் புயல் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விவசாயிகள் எடுக்க வேண்டும். முதலில் காற்றைத் தடுக்கும் வேலிகளை அமைக்க வேண்டும். தோட்டத்தின் வேலி ஓரத்தில் முள்ளில்லா மூங்கில் கன்றுகளை 5 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இது காற்றைத் தடுத்து விடும். ஐந்தாண்டுகளில் மூங்கில் மூலமாகவும் வருமானம் கிடைக்கும்.

சுள்ளிக் குச்சிகள் சிறந்த உரம்
ஞானப்பிரகாசத்தைத் தொடர்ந்து பேசிய மதுரை, இயற்கை விவசாய ஆலோசகர் செந்தில்நாயகம், இயற்கை உரத்தை இன்னொரு வழி மூலமாவும் முந்திரிக்குக் கொடுக்கலாம். ஒவ்வொரு மரத்தில் இருந்தும் 5 அடி இடைவெளியில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி ஆழம்கிற கணக்கில் குழி எடுத்து, அரையடி உயரத்துக்கு சுள்ளி அதற்கு மேல் கலவை எரு என்று மாற்றி மாற்றி போட்டு நிரப்ப வேண்டும் (தொழுவுரம் - 100 கிலோ, ஊற வைத்த கடலைப்பிண்ணாக்கு- 3 கிலோ, தயிர்-2 லிட்டர், நாட்டுச் சர்க்கரை-அரை கிலோ. இதையெல்லாம், 5 லிட்டர் தண்ணீர் விட்டு கலந்து, 3 நாட்கள் நிழலில் குவித்து வைத்துவிட்டால் கலவை எரு தயார்.

இந்த எருவை, பகிர்ந்து ஒவ்வொரு குழிக்கும் பயன்படுத்திக்கலாம். குழி மேல் பதினைந்து நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துக் கொண்டே  வந்தால், மூன்று மாதத்திற்குள் ந்னறா மட்கி உரமாகிவிடும். அந்தச் சத்துக்களை அப்படியே மரம் எடுத்துக்கும். மரத்தைச் சுற்றி பள்ளம் பறித்தும் இந்த மட்கைப் போடலாம் என்றவர்,புயல் காத்தில் இருந்து முந்திரியைக் காப்பாற்ற மூங்கில் மரங்களை நடச் சொன்னார் ஞானப்பிரகாசம் ஐயா. அதேபோல வேலி ஓரங்களில் பனை, பரம்பை முள், கலாக்காய், நாட்டுக்கருவேல், வெள்ளைக்கருவேல்  மாதிரியான மரங்களையும் முக்கோண முறையில் வளர்க்கலாம்' என்றும் தன் பங்குக்கு ஆலோசனை தந்தார் செந்தில்நாயகம்.

கடலூர் மாவட்டத்தின் சா.நெல்லித்தோப்பு கிராமத்தில், பலா மரங்களைக் காப்பாற்றுவதற்காக, இயற்கை முறையில் பலா சாகுபடி செய்து வரும் சிவகங்கை மாவட்டம், கல்லுவளி கிராமத்தைச் சேர்ந்த ஆபிரகாம் நிறைய யோசனைகள் தந்தார். பேசிய ஆபிரகாம், பொதுவாக, பலா மரத்தில் நோய் அதிகமாக தாக்காது. பிஞ்சு பருவத்தில் காய்ப்பூச்சி தாக்ககுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரண்டு லிட்டர் தண்ணீரில் ஐம்பது கிராம் வேப்பம்பிண்ணாக்கை நன்றதக ஊற வைத்துத் தெளித்தால், காய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்திடலாம். காப்பர் சத்து குறைந்தால், மரத்தில பூஞ்சணம் தென்படும். அப்படி இருந்தால், மரத்தை சுற்றி, துற்றிச் செடியை வளர்த்து மடக்கி உழுதுவிட்டால் சரியாகிவிடும் என்று இயற்கைத் தீர்வையும் சொல்லி, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

தொடர்புக்கு,
ஞானப்பிரகாசம்,தொலைபேசி: 94428 57292.
செந்தில்நாயகம், செல்போன்: 99651-82001.
ஆபிரகாம், செல்போன்: 98431-85444.
விவசாயிகள்: ராதகிருஷ்ணன் (முந்திரி) செல்போன்: 99768-08844.
சந்திரன் (பலா) செல்போன்: 95514-43667.
முத்தையா (பலா) செல்போன்: 98423-86413.

ஒரு ஏக்கர்… 5 மாதம்… ரூ.77 ஆயிரம் இலாபம்..

தேதி : 25.03.2012
கோலியஸ் கிழங்கில் வருமானம் வனப்பகுதியை ஒட்டிய  நிலங்களுக்கு ஏற்றது. விற்பனைக்குக் கவலையில்லை. காய்கறிகள், நெல், வாழை, தென்னை என சந்தையில் எப்போதும் கிராக்கி இருக்கும் பலவிதமான பயிர்கள் இருந்தாலும் மூலிகைப் பயிர்கள் சிலவற்றுக்கும் நிலையான சந்தை இருக்கத்தான் செய்கிறது. விவரமறிந்த விவசாயிகள் துளசி, வெட்டிவேர், செங்காந்தல், கோலியஸ் போன்ற மூலிகைப் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். இத்தகையப் பயிர்கள், பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருவதால், விற்பனை பற்றிய கவலையும் இல்லை. அந்த வகையில் 'கோலியஸ்' என்று அழைக்கப்படும், மருந்து கூர்க்கன் கிழங்கை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி.

விலங்குகள் தொல்லை இல்லவே இல்லை
காலை வேளையொன்றில் தோட்டம் தேடிச் சென்ற வரவேற்ற நாராயணமூர்த்தி, இவர் விவசாயக் குடும்பத்தைச் சேந்தவர்தான். சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் பரிச்சயம் உண்டு. ஐ.டி.ஐ. முடிச்சுட்டு பத்து வருடம் வேலை பார்த்து அதில் வருமானம் சரியாக இல்லாததால், குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்தார்.
ஐந்து ஏக்கர் நிலம், மலையடிவாரத்தில் இருக்கிறது. இதில் கரும்பு, கடலை என்று எந்தப் பயிர் செய்தாலும், காட்டுப்பன்றிகள் வந்து அழித்துவிடும். அவற்றிடமிருந்து எப்படி வெள்ளாமையைக் காப்பது என்று பலரிடமும் யோசனை கேட்டப்போதுதான், 'கோலியஸ் கிழங்கைப் போட்டால் ஆடு, மாடு, பன்றி மாதிரியான விலங்குகள் தொல்லை இருக்காது என்று சொல்லியிருக்கிறார்கள. அதுபற்றி விசாரித்து, தனியார் கம்பெனி மூலமாக விதைத் தண்டு வாங்கி வந்து நடவு செய்துள்ளார்.
ஒப்பந்த முறை சாகுபடி!
மூலிகைப் பயிர் எப்படி வருமோ? என்று கொஞ்சம் சந்தேகம் இருந்ததால், ஒரு ஏக்கரில் மட்டும் சோதனை முயற்சியாக போட்டுள்ளார். ஆறு மாதத்தில் 6 டன் மகசூல் கிடைத்துள்ளது. 35 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அதுலிருந்து ஆறு வருடமாக தொடர்ந்து சாகுபடி செய்கிறார். ஒரு கம்பெனிகிட்ட ஒப்பந்தம் போட்டிருக்கறதால், விற்பனையில் பிரச்னை இல்லை. சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் ஒப்பந்தம் போட்டபடி இவருக்கு விலை கிடைத்திருக்கிறது  என்றவர், சாகுபடிப் பாடத்தை  ஆரம்பித்தார்.

ஆவணி, ஐப்பசி பட்டங்கள் ஏற்றவை
'கோலியஸ் கிழங்கின் சாகுபடிக் காலம்,  6 மாதங்கள். வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆவணி மற்றும் ஐப்பசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இந்தப் பட்டங்களில் சாகுபடி செய்தால் மழையால் பாதிக்கப்படாது.

ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டு
கோலியஸ் நடவு செய்ய, ஏக்கருக்கு10 டன் என்கிற கணக்கில் நிலத்தில் எருவைப் போட்டு உழுது, புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அடியுரமாக 250 கிலோ ஜிப்சம், 100 கிலோ காம்ப்ளக்ஸ், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 5 கிலோ குருணை மருந்து ஆகியவற்றை கலந்து நிலத்தில் தூவி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஓர் அடி இடைவெளியில், இரண்டடி பார் ஓட்ட வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில், 50 கிராம் அசோஸ்பைரில்லத்தை கலந்து, அதில் விதைத்தண்டுகளை நனைத்து, ஒன்றே கால் அடிக்கு ஒரு விதைத்தண்டு வீதம் நடவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டுகள் தேவைப்படும்.

2 முறை மட்டும்தான் களை எடுக்க வேண்டும்
நடவு செய்யும் போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நடவு செய்து, 3-ம் நாளில் உயிர் தண்ணீர் கட்டவேண்டும். அதன் பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கட்டினால் போதும். 10-ம் நாளில் வேர் பிடித்து வளர ஆரம்பிக்கும். 25 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். கையோடு காம்ப்ளக்ஸ், சூப்பர்- பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்களில் தலா 50 கிலோ வீதம் கலந்து, ஒவ்வொரு செடியின் அடிப்பகுதியிலும் கையளவு வைத்து, மண் அணைக்க வேண்டும். அதன்பிறகு, களை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் கிழங்குகள் வெட்டுப்பட்டு விடும்.

நடவு செய்த 60, 90, 120 மற்றும் 150-ம் நாட்களில்... 50 கிலோ பொட்டாஷை, பாசனத் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் நூற்புழுக்கள் மற்றும் வேறு ஏதாவது பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
180-ம் நாளில் அறுவடை
45-ம் நாளுக்கு மேல் பக்க வேர்கள் வளர்ந்து, 60-ம் நாளுக்கு மேல், கிழங்காக மாற ஆரம்பிக்கும். 165 முதல் 180 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். தரையில் இருந்து அரையடி அளவு விட்டு, மீதம் இருக்கும் தழைப் பகுதிகளை அறுத்து அப்புறப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் அல்லது டிராக்டரில் கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்து, கிழங்குடன் இருக்கும் அடித்தண்டைச் சேகரித்து, கிழங்கு மற்றும் அடித்தண்டு ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.'
ஏக்கருக்கு  ஒரு லட்சம்
நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய நாராயணமூர்த்தி, ஒவ்வொரு செடியிலயும், அரை கிலோ முதல் ஒண்ணரை கிலோ வரை கிழங்குகள் கிடைக்கும். ஏக்கருக்கு சராசரியாக 8 டன் கிழங்கு மகசூலாக கிடைக்கும். கூடவே 2 டன் அளவுக்கு அடித்தண்டும் கிடைக்கும். ஒரு டன் கிழங்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம், 8 டன் கிழங்குக்கு 96 ஆயிரம் ரூபாயும்; ஒரு டன் 2 ஆயிரம் ரூபாய் வீதம் 2 டன் அடித்தண்டுக்கு 4,000 ரூபாயும் கிடைக்கும். மொத்தம் 1 லட்சம் ரூபாய். இதுல செலவு போக, 77 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளைப் போட்டுப் பார்த்துச் சொன்னார் சந்தோஷமாக.
இயற்கை முறை சாகுபடியே சிறந்தது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலிகைத்துறை பேராசிரியரான ராஜாமணி, 'கோலியஸ்' கிழங்கு பற்றி நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்:
''கோலியஸ் கிழங்கு, 'லேமினேசியே’ குடும்பத்தைச் சேர்ந்த, இந்திய வகை மூலிகைப்பயிர். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இதை உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதைச் சாகுபடி செய்வதற்கேற்ற தட்பவெப்ப நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதால், இங்கே 4 ஆயிரம் ஏக்கரில் இந்த கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கோலியஸ் உற்பத்தியில், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதிலிருந்து 'ஃபோர்ஸ்கோலின் என்கிற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, மேற்கத்திய நாடுகளில் ஆயுர்வேத மருத்துவ முறையில், உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. தவிர, கண் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
நூற்புழுக்களைத் தடுக்கும் செண்டுமல்லி
கோலியஸ் என்பது மூலிகைப் பயிர் என்பதால், முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்வதுதான் நல்லது. கோலியஸை கொள்முதல் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களும் அதைத்தான் விரும்புகின்றன. இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிட வேண்டும். இப்படிச் செய்தால், நூற்புழுத் தாக்குதலைக் குறைப்பதோடு, செண்டுமல்லி மூலமாகவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் சி.எப்-36 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளோம். இந்த ரகத்தில் பூச்சி, நோய் தாக்குதல்கள் குறைவதோடு, அதிக மகசூலும் கிடைக்கும் என்று சொன்ன ராஜாமணி,
ஒப்பந்தமுறை சாகுபடியில் கவனம்
கடந்த ஐந்தாண்டுகளில் காய்ந்த கோலியஸ் கிழங்கு, ஒரு கிலோ 100 முதல் 125 ரூபாய் வரைதான் விற்பனை ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு, ஒரு கிலோ காய்ந்த கிழங்கு 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சைக் கிழங்குக்கு 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சாகுபடி செய்வது சிறந்தது. இதுதான் உறுதியான விலை, பயிர் காப்பீடு, மானியம் போன்றவை கிடைக்க உதவியாக இருக்கும் என்கிற எச்சரிக்கைத் தகவல்களையும் தந்தார்.
தொடர்புக்கு,
நாராயணமூர்த்தி,
செல்போன்: 94446-81925
மூலிகைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி: 0422-6611365.

ஒரு தார் 1,000 ரூபாய்

தேதி : 25.03.2012
சுற்று வட்டார வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் 'பெரிய வாழைத்தார்' என்று ஆரம்பித்தாலே போதும், 'சுந்தரம் தோப்பில் விளைந்ததைதானே சொல்கிறீர்கள் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். அவருடைய தோப்பில் எட்டடி உயரத்துக்கு விளைந்த வாழைத்தார்கள் தேடித்தந்த பெருமை இது. இவர்கள் 50 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள். 30 ஏக்கரில் நெல், 10 ஏக்கரில் தென்னை இருக்கிறது. மீதி பத்து ஏக்கரில் எப்பவும் மொந்தன் வாழை ரகத்தைத்தான் போடுகிறார்கள். 2008-ம் வருஷம் திருச்சியில் இருக்கும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில், 'உதயம் திசு வாழை' என்று சொல்லி நான்கு கன்றுகள் இலவசமாக கொடுத்தார்கள். அதை நடவு செய்திருக்கிறார்கள். பதினான்கு மாதம் வளரக்கூடிய அந்த ரகம், அறுவடையின்போது ஒவ்வொரு தாரும் எட்டடி உயரத்திலேயும் எழுபது முதல் எண்பது கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதைப் பார்த்து ஊரே அதிசயப்பட்டதாக கூறுகிறார்.
தாருக்கு 25 சீப்பு
ஒவ்வொரு தார்லயும் 25 சீப்புக்குக் குறையாமல் இருந்தது. பழம் நல்ல திரட்சியாக இருந்ததால் தாருக்கு 1,000 ரூபாய் வரை விலையும் கிடைத்தது. இரண்டாம் முறையும் அதேமாதிரி விலை கிடைத்தால் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் கன்றுகள் வைத்துப்  பாக்கலாம் என்று தோன்றியதாக கூறுகிறார். ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு கன்று பத்து ரூபாய் என்று 50 கன்றுகளை வாங்கிட்டு எட்டு சென்டில் நடவு செய்தார். அதைத்தான் இப்பொழுது அறுவடை செய்திருப்பதாக கூறுகிறார் சுந்தரம், வாழைத் தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்று உதயம் வாழை மரங்களைக் காட்டினார். ஒவ்வொரு மரமும் 25 அடி உயரத்துக்கு வளர்ந்து பசுமை கட்டி செழிப்பாகக் காட்சி அளித்தன.

50 மரம்... 50 ஆயிரம் ரூபாய்
தார் வெட்டும் பருவத்துக்கு வந்தாலும், இலையெல்லாம் காய்வதில்லை. அடிப்பகுதி பெருத்து மரம் நன்றாக உறுதியாக இருக்கும். அறுவடை செய்த பிறகு, பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்தாலும் பழம் கெட்டுப் போவதில்லை. அதனால், வைத்திருந்தும் விற்கலாம். இவர் இயற்கை உரங்களோடு, ரசாயன உரங்களையும் கலந்துதான் சாகுபடி செய்கிறார். எட்டு சென்டில் சாகுபடி செய்வதற்கு உரம், அறுவடை, போக்குவரத்து, கமிஷன் எல்லாம் சேர்த்து 16 ஆயிரத்து 750 ரூபாய் செலவாகிறது. ஒரு தார் 1,000 ரூபாய் என்று விற்றாலும் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. செலவு போக, 33 ஆயிரத்து 250 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இந்த முறை இன்னும் அதிக கன்றுகள்  நட இருப்பதாக   சொன்ன சுந்தரம், எட்டு சென்ட் நிலத்தில், 50 உதயம் வாழைகளுக்கு தான் பயன்படுத்திய சாகுபடி தொழில்நுட்பங்களையும் விவரித்தார்.

சணப்பின் நிழலில் வாழை
வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். அதேபோல், தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.

9 அடி இடைவெளி
வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.நடவிலிருந்து 3 மாதம் கழித்து, 100 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர்-பாஸ்பேட், 150 கிராம் பொட்டாஷ், 250 கிராம் ஜிப்சம், 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் இட வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இதேபோல ஐந்தாம் மாதத்திலும் உரம் இட வேண்டும்.

நான்காவது மாதத்தில் ஒவ்வொரு மரத்துக்கும் சவுக்குக் குச்சியால் முட்டுக் கொடுக்க வேண்டும். நடவிலிருந்து 3, 5, 6-ம் மாதங்களில் நுண்ணூட்டக் கலவையைத் தெளிக்க வேண்டும். 10 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி, 10 மில்லி சூடோமோனஸ், 10 மில்லி இயற்கை நுண்ணூட்ட திரவம் இவற்றை 500 மில்லி தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இந்தக் கலவையை மரத்தைச் சுற்றிலும், குறிப்பிட்ட அளவிலான இடங்களில் கடப்பாரையால் ஓங்கி ஒரு குத்துவிட்டு, அந்த துளையில் ஊற்ற வேண்டும். வாடல் நோய் தாக்கினால் அதற்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கலாம்.

இயற்கைக் கவர்ச்சிப்பொறி
நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால் அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும். நடவு செய்த 10-ம் மாதத்தில் தார் விடத் தொடங்கும். அனைத்து சீப்புகளும் வந்தவுடன், பூவை ஒடித்துவிட்டு, தாரைச் சுற்றிலும் நைலான் உறையால் மூடி வைக்க வேண்டும். தாரின் மேல்புறமும், கீழ்புறமும் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இது பனி, வெப்பம் மற்றும் பூச்சிகளிலிருந்து தாரைப் பாதுகாக்கும். 14-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம்.

தொடர்புக்கு
சுந்தரம்,
செல்போன்: 91766-29570.

நட்டமில்லா வெள்ளாமைக்கு நாட்டு எலுமிச்சை

தேதி : 10.01.2012
தென்னை, பாக்கு, பழ மரங்கள் என்று எந்த சாகுபடியாக இருந்தாலும், தோட்டத்தை, களைகள் இல்லாமல் உழுது சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அதைத்தான் செயல்படுத்தியும் வருகிறார்கள். ஆனால், புலவர் நாகராஜ் ''களைகளை உயிர்மூடாக்காகப் பயன்படுத்தி, அவற்றையே உரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இயற்கை வேளாண்மைக் கோட்பாடு. அதை வரி பிறழாமல் கடைபிடித்து வருவதாகவும், அது, தனக்கு வருமானத்தை வாரி வழங்குகிறது என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார். திருச்சி மாவட்டம், லால்குடி தாலூகாவில் உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் புலவர் நாகராஜன். அங்கு களைகள் மண்டி, ஒரு சிறிய காடு போலக் காட்சி அளிக்கிறது, அவருடைய எலுமிச்சைத் தோட்டம். படர்ந்து விரிந்த அதிக எண்ணிக்கையிலானக் கிளைகள்,பசுமையான இலைகள், கொத்து கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் காய்கள், எனச் செழித்து நிற்கின்றன, எலுமிச்சை மரங்கள்.

சோதனையில் சாதனை
மிகுந்த உற்சாகத்தோடு பேசும் நாகராஜன், இவர் குடும்பத்துக்கு எட்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. நல்ல வண்டல் பூமி. அதில், இரண்டரை ஏக்கரில் வாழையும், நான்கே முக்கால் ஏக்கரில் நெல்லும் இருக்கிறது. மீதி ஒன்றேகால் ஏக்கரில் எலுமிச்சை இருக்கிறது. இந்த இடத்தில் இருபது வருடத்துக்கு முன்பு வாழை சாகுபடி மட்டும்தான் நடந்ததாக கூறுகிறார். சோதனை முயற்சியாகத்தான் எலுமிச்சை நடவு செய்திருக்கிறார். நல்ல வருமானம் கிடைக்கவும், அப்படியே பராமரித்து வருவதாக கூறுகிறார்.

களைகளே உரம்
25 அடி இடைவெளி கொடுத்து, மொத்தம் 100 மரங்களை நடவு செய்திருக்கிறார். எல்லாமே நாட்டு ரகங்கள்தான். இரசாயன உரம் கொடுப்பதே இல்லை. புண்ணாக்கு, எருனு முழு இயற்கை விவசாயம்தான். அதே மாதிரி, மூங்கில் புல், விருமலைக்காச்சி பூண்டு, புண்ணாக்குப் பூண்டு, அருகம்புல் என்று எந்தக் களைச்செடியையும் தோட்டத்தில் இருந்து வெளியில் வீசுவதே இல்லை. ஆறு மாசத்திற்கு ஒரு தடவை அவைகளை பறித்துப் போட்டு போட்டு தண்ணிர் பாய்ச்சுகிறார். அது அப்படியே மட்கி உரமாகிவிடும். கன்று நடவு செய்த மூணு வருடம் வரைக்கும் மிளகாயை ஊடுபயிராக போட்டிருக்கிறார். தோட்டத்தை முழுக்க இயற்கையாவே பராமரிப்பதால் நோயோ, பூச்சியோ தாக்குவதேயில்லை. 20 வயதாகியும் இன்னும் காய்ப்பு குறையாமல் மகசூல் கொடுத்துட்டிருக்கிறது. காய்க்கிற பழங்கள், திரட்சியாக நல்ல நிறத்தோடு, சுவையோடு இருப்பதால், சந்தையில் தனி மவுசு இருக்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது, என்று இயற்கை எலுமிச்சை விவசாயத்துக்குக் கட்டியம் கூறிய நாகராஜன், சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.  
25 அடி இடைவெளி
தேர்வு செய்த நிலத்தில் மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 25 அடி இடைவெளி இருப்பது போல ஒன்றரை கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். ஒரு செடிக்கு ஒரு கிலோ ஆமணக்கு பிண்ணாக்கு, அரை கிலோ வேப்பம் பிண்ணாக்கு,15 கிலோ தொழுவுரம், 5 கிலோ ஆட்டு எரு என்கிற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையைக் குழிக்குள் கால் பாகம் அளவுக்கு நிரப்பி, நாட்டு எலுமிச்சைக் கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, செடியைச் சுற்றி வட்டமாக லேசாக குழி பறித்து, மீதிக் கலவையைக் கொட்டிவிட வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
ஆண்டுக்கொரு முறை உரம்
எலுமிச்சைச் செடிகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் வரை, இடைவெளியில் காய்கறி போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். கன்று நடவு செய்தபோது கொடுத்தது போலவே உரக் கலவையைத் தயாரித்து ஆண்டுக்கொரு முறை மரங்களுக்குக் கொடுத்து வர வேண்டும். இப்படி உரம் கொடுப்பதை, மரத்தைச் சுற்றி, அரை வட்ட அளவுக்குக் குழி எடுத்து கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டில், எதிர் திசையில் அரைவட்டக் குழி எடுத்து உரமிட வேண்டும். மரத்தின் செழுமைத் தன்மை குறைந்தால் தொழுவுரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மூன்றாம் ஆண்டில் காய்ப்பு
நடவு செய்த மூன்றரை ஆண்டுகள் கழித்து எலுமிச்சை காய்ப்புக்கு வரும். ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் அதிகரித்து, ஏழாம் ஆண்டிலிருந்து முழுமையான மகசூல் கிடைக்கத் தொடங்கும். மரங்களுக்கு இடையில் முளைக்கும் களைகளை ஆறு மாதத்துக்கு ஒரு முறை வெட்டி அப்படியே மரத்தைச் சுற்றிப் போட்டுவிட வேண்டும். பிறகு ஒரு வாரம் கழித்து தண்ணீர் பாய்ச்சினால், அவை நன்கு மட்கி மரங்களுக்கு உரமாகி விடும்.

மூன்று லட்சம் வருமானம்
நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய நாகராஜன், ஒரு மரத்தில் ஒரு வருடத்திற்கு சராசரியாக, 2 ஆயிரம் எலுமிச்சம்பழம் கிடைக்கிறது. மொத்தம் இருக்கிற 100 மரங்களில் இருந்து வருடத்துக்கு சராசரியாக 2 இலட்சம் பழம் கிடைக்கிறது.

சீசனைப் பொருத்து ஒரு பழம்
4 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். சராசரியாக 1 ரூபாய் 50 காசு விலை கிடைக்கும். அந்தக் கணக்கில் ஒன்றேகால’ ஏக்கரில் இருந்து, வருடத்திற்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இடுபொருள், களைபறிப்பு, அறுவடைக் கூலி என்று எல்லா செலவும் போக, இரண்டரை லட்ச ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது என்று மன நிறைவாகச் சொன்னார்.

நின்றுகொண்டே பழங்களை எடுக்கலாம்
மரத்தை சுற்றி விழுந்து கிடக்கும் பழங்களை சேகரிக்க, மூன்றரையடி நீளத்தில் அகப்பை போல இரும்பில் ஒரு கருவியைத் தயாரித்து வைத்திருக்கிறார் நாகராஜன். அதன் மூலம் கிழே விழுந்து கிடக்கும் பழங்களை நின்றுகொண்டே சேகரிக்கிறார்.
தொடர்புக்கு
044-42890002

மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்...

தேதி : 25.01.2012
நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி! கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!
தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம் என்பதால், 24 வருடமாக வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன். மூன்று ஏக்கர் நிலத்தை இரண்டு பகுதியாக பிரித்து, சுழற்சி முறையில் வெள்ளாமை பண்றேன். அதனால் எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருடத்திற்க்கு முன் நண்பர் ஒருத்தர் மூலமாக பஞ்சகவ்யா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போது, நல்ல பலன் கிடைத்ததால், இயற்கை வழி விவசாயத்திற்க்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!
அந்த சமயத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருடத்தில் அருமையான மாற்றம் தெரிந்தது. மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில் நோய்த் தாக்குதலே இல்லாமல்... காயெல்லாம் திரட்சியாக காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போது... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனால், இயற்கைக்கு மாறின பிறகு... பதினைந்து டன் மகசூல் கிடைத்தது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமாக கிடைக்கவே... சந்தோஷமாக நகர ஆரம்பித்தது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!
என் தோட்டத்துல விளையும் வாழையில் குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனால், அவர் கூடுதலாக கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால்... உடனடியாக, சிப்ஸ் தயாரிப்பில் இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!
''ஆரம்பத்தில் இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால், தேங்காய் எண்ணெயில் இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளாக பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம். நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில் விளைஞ்சதால் சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!
''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகளில் ஆர்டரும் கொடுத்தாங்க. அடுத்த வாரத்தில் நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!
15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தாரில் இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு
கே.ஆர். சுந்தரம்,
செல்போன்: 96009-16166

நயம் நாட்டுச் சர்க்கரை !

தேதி : 25.01.2012
காலங்களை வென்ற ஊத்துக்குளி' நெய், 'சேலம்' மாம்பழம், 'பண்ருட்டி' பலா, 'மணப்பாறை' முறுக்கு... என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, 'கவுந்தப்பாடி' நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக நுழைகிறது, சர்க்கரைப் பாகின் நறுமணம். கரும்பை ஆலையிலிட்டு அரவை செய்வது, அரைத்தக் கரும்புப்பாலைக் கொப்பரையில் கொதிக்க வைப்பது... என ஆங்காங்கே பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த ஒரு முற்பகலில், குவியலாகக் கிடந்த சர்க்கரையை மூட்டை பிடித்துக் கொண்டிருந்த பொன்னுசாமியிடம் பேசினோம்.

மூணு தலைமுறையா மதிப்புக்கூட்டல் !
''விவசாயிங்க, உற்பத்தி செய்யும் பொருள்களில் ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டி வித்தாத்தான் லாபம் பார்க்க முடியும் என்று சமீபகாலமாக பலரும் சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. ஆனால், பல நூறு வருடத்திற்க்கு முன்ன இருந்தே... கரும்பை மதிப்புக்கூட்டி சர்க்கரையா மாத்திக்கிட்டு இருக்கோம் நாங்க. ஆமாம்... மூன்று, நான்கு தலைமுறையாக, இந்தப் பகுதியில் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி நடக்கிறது. கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் இருக்கும் விவசாயிகள், கரும்பை ஆலைகளுக்கு அனுப்புவதில்லை.

முன்பெல்லாம், தை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரைதான் சீசன் இருக்கும். ஆனால், இப்ப அப்படியில்லை. பத்து மாதமும் பவானி ஆத்துத் தண்ணீர் கிடைப்பதால், கரும்புக்குப் பட்டம் இல்லாமல் போயிடுச்சு. நடவு, களை, அறுவடை என்று வருடமெல்லாம் வெள்ளாமை இருக்கு. அடைமழைக் காலம் போக மத்த நாட்களில் சர்க்கரை உற்பத்தி நடந்துட்டே இருக்கு. இப்ப கரும்புல வீரிய ரகங்கள் வந்துடுச்சு. இருந்தாலும், பெரும்பாலான விவசாயிங்க நாட்டுக்கரும்பையும் விடாம விளைய வெச்சுக்கிட்டுதான் இருக்காங்க'' என்று முன்கதைகளோடு சேர்த்து ஊர் பெருமை பேசினார் பொன்னுசாமி.

அடுத்ததாக, கரும்பு அரைக்கும் இயந்திரத்தின் பசிக்கு கரும்பைத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த 'சிலுக்குப்பட்டி' வெங்கடாச்சலம், இங்கே பேசுகிறார்... ''தாத்தா காலத்துலயெல்லாம்... மரத்துல செய்த செக்கு மாதிரியான ஆலையில் கரும்பை நசுக்கி, பெரிய பெரிய மண் மொடாக்களில் நிரப்பி வைப்பாங்க. பிறகு, காது வைத்த பெரிய செப்புக் கொப்பரைகளில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சுவாங்க. பாகு பதத்திற்க்கு வந்ததும் ஆறவைத்து 'தேய்ப்பு முட்டி’ என்று சொல்லும் மர முட்டிகளை வைத்து, கட்டிகளை உடைத்து, தேய்ச்சுப் பொடியாக்குவாங்க. பிறகு பொதி மாடுகளில் ஏற்றி பெருந்துறை, பொள்ளாச்சி, காங்கேயம், கரூர், ஒட்டன்சத்திரம் சந்தைகளில் கொண்டுபோயி கொடுத்துட்டு... உப்பு, சீரகம், துணிமணிகள் என்று  தேவையானதை வாங்கிட்டு வருவாங்க. இப்ப உள்ளூர்லயே சந்தை இருக்கு. ஏதோ நாட்டுச் சர்க்கரை புண்ணியத்துல பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு''பேச்சு முடிந்ததற்கு அடையாளமாக, வேலையில் மும்முரமானார், வெங்கடாச்சலம். அடுத்ததாக, நாம் சென்ற இடம் கவுந்தப்பாடி சர்க்கரை சந்தை. அணி அணியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, சர்க்கரை மூட்டைகள். வெளியூர் வியாபாரிகளால் பரபரப்பாக இருந்தது, சந்தை. நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ப.அ. மசக்கவுண்டரிடம் பேசினோம்.

மறந்து போன பழக்கம் !

''தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாட்டுச் சர்க்கரை சந்தை என்றால், அது கவுந்தப்பாடிதான். முகலாயர் ஆட்சிக்கு முன்ன இருந்தே இங்க சர்க்கரை தயாரிப்பு நடந்திட்டிருக்கு. பழனி பஞ்சாமிர்தத்தில் கலக்குற நாட்டுச் சர்க்கரை, இங்க இருந்துதான் போகுது. சீசன் காலத்துல, வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு வெளியூர்களுக்குப் போகும். கொஞ்ச வருடத்திற்க்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு சாப்பாட்டு இலையில சர்க்கரை, பழம் வைக்கும் வழக்கம் இருந்தது. அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடை காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த 'பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது'' என வருத்தப்பட்டவர்.

இதுல கலப்படம் இல்லை !
''நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது. சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க. ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது. வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்... வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்'' என்று ஆரோக்கிய ஆலோசனைகளையும் தந்தார் மசக்கவுண்டர்.

மதிப்புக் கூட்டினால் ஏக்கருக்கு லட்ச ரூபாய் !
நிறைவாக லாபக் கணக்குப் பேசியவர், ''பொதுவாக கரும்பில் 35 டன்தான் சராசரி விளைச்சல் என்று சொல்வாங்க. ஆனால், எங்க பக்கமெல்லாம் ஏக்கர்ல 50 டன்ங்கறதுதான் சராசரி விளைச்சல். அதுக்குக் காரணம், மண் வளமும் முறையான பராமரிப்பும்தான். 50 டன் கரும்பிலிருந்து 5 முதல் 6 டன் நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி பண்ணலாம். 60 கிலோ மூட்டை ஆயிரத்து ஐநூறு ரூபாய்ல இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. இந்தக் கணக்கை வைத்து பார்த்தால்... ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் கிடைக்கும். கரும்பு வெட்டிலிருந்து விற்பனை வரை எல்லா செலவும் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் போனாலும்... ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நிச்சயம் லாபமா கிடைக்கும்'' என்ற மசக்கவுண்டர்,''இந்த நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செழிப்பாக இருக்கணும் என்றால், அரசாங்கம் அஸ்கா சர்க்கரை உற்பத்தி பண்றதுல செலுத்துற கவனத்தில், கொஞ்சமாவது நாட்டுச் சர்க்கரை பக்கமும் திரும்பினால்தான் கவுந்தப்பாடி சர்க்கரை... தலைமுறைகள் தாண்டியும் இனிக்கும்'' என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

தொடர்புக்கு
என்.கே.கே. பெரியசாமி,
செல்போன்: 94432-42726,
மசக்கவுண்டர், செல்போன்: 98428-45077
வெங்கடாச்சலம், செல்போன்: 90952-75737

புதையல் கொடுக்கும் பூவரசு !

தேதி : 25.01.2012
ஏக்கருக்கு 1,200 மரங்கள். ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம். பராமரிப்புச் செலவு இல்லை. இதய வடிவிலான இலைகள்... மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்... குளிர்ந்தக் காற்று... இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்... கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... 'நாட்டுத் தேக்கு' என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட. அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

தேக்கு, குமிழ் போன்ற மரங்களுக்கான தேவை இருப்பதால், அவற்றை புதிது புதிதாக அதிக அளவில் வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால், அதேபோல, பெரிய அளவில், பூவரசு மரத்தை புதிதாக உருவாக்கத் தவறிவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதன் மகத்துவத்தை அறிந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்கள் மட்டுமே பூவரசு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்! அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

''இப்போ என் தோட்டத்துல 25 பூவரசு மரங்கள் இருக்கு. எல்லாமே, இருபதுல இருந்து இருபத்தைந்து வயதிற்குள் உள்ள மரங்கள். இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நல்லா வளர்ந்த ஒரு மரத்தை வெட்டுவேன். ஆசாரிகளை வைத்து, கட்டில், பீரோ என்று செய்து சுத்துவட்டாரத்துல விற்றுவிடுவேன். தேக்கைவிட நல்ல நிறமா இருக்கும் என்பதால்  பூவரசுக்கு மரியாதை ஜாஸ்தி. இருபது, முப்பது வயதிருக்கும் மரத்தில்... இரண்டு பீரோ (ஆறரையடி உயரம், நாலரையடி நீளம் இரண்டடி அகலம்) ஒரு கட்டில் (7 அடி நீளம் 5 அடி அகலம்) செய்யலாம். இந்த மரத்தை வளர்ப்பதும் ரொம்ப சுலபம்தான்'' என்றார்.

போத்து நடவு !
'பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம். 6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால்... ஒரு ஏக்கர் நிலத்தில் 600 போத்துகளைப் பதியன் செய்யலாம். மொத்தம் 1,200 மரங்கள் உருவாகும்.

பராமரிப்பு தேவையில்லை !
நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரத்தை விட்டு, ஒரு மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். இப்படி 600 மரங்களை வெட்டலாம். அடுத்து ஐந்து ஆண்டுகள் (நடவு செய்த 10-ம் ஆண்டில்) கழித்து ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற கணக்கில் 300 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து (நடவு செய்த 15-ம் ஆண்டில்) மீதி மரங்கள் நன்கு பெருத்திருக்கும் அப்போது அவற்றை வெட்டலாம்.'
நிறைவாக வருமானம் பற்றி விவரித்த மாரியப்பன், ''ஐந்தாம் வருடம் வெட்டும் போது ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கும். 600 மரங்கள் மூலமா 6 லட்ச ரூபாயும்; பத்தாம் வருஷம் வெட்டும் போது, மரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 300 மரங்களுக்கு 9 லட்ச ரூபாயும்; 15-ம் வருஷத்துல மிச்சமிருக்குற 300 மரங்கள் மூலமா மரம் 5 ஆயிரம் ரூபாய் வீதம்  15 லட்ச ரூபாயும் வருமானமா கிடைக்கும். மொத்தத்தில் 15 வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்துவிட முடியும்.

மதிப்புக்கூட்டினால் அதிக லாபம் !
மரமாக விற்க்காமல்... நாமளே கட்டில், பீரோ என்று செய்து விற்க்கும் போது கூடுதல் லாபம் கிடைக்கும். சாதாரணமாக ஒரு பீரோ 30 ஆயிரம் ரூபாய்க்கும், கட்டில் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகும். 20, 25 வருட மரத்தில் இரண்டு பீரோ, ஒரு கட்டில் செய்யலாம். இதன்படி பார்க்கும்போது ஒரு மரத்தில் இருந்தே, 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல, வெட்டுக் கூலி, அறுப்புக் கூலி, இழைப்புக் கூலி, ஆசாரிக் கூலி, தாழ்ப்பாள் மாதிரியான உதிரி சாமான்கள் எல்லாம் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவானாலும், ஒரு மரத்தில் இருந்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.மரத்தை அறுத்து துண்டு போட்டு, இழைச்சும் விற்க்கலாம். இருபதுல இருந்து முப்பது வயதுள்ள மரத்தில் சராசரியாக 25 கன அடிக்கு மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்கு சராசரியாக 1,200 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் இருந்து செலவெல்லாம் போக, 22 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்'' என்றார்.

வீழ்ந்தாலும் வளரும் !
''இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டால்... திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. ஒவ்வொரு வருடமும் கவாத்து பண்ற கிளைகளை போத்தாவும் விற்றுவிடலாம். அதுவும் நல்லா விற்பனையாகிறது. பதியன் போடுவதற்க்கும் வாங்கிக்கறாங்க. விவசாயிங்க மனசு வைச்சாங்கனா... அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பண்ற பூவரசு மரங்களை நடவு செய்து சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, தங்களையும் வளமாக்கிக்க முடியும்'' என்றார், சந்தோஷமாக!

தொடர்புக்கு
மாரியப்பன், செல்போன்: 97881-88463.

60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்

புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, 'பசுமை விகடன்’. இத்தகைய விவசாயிகளின் அனுபவங்களை, உடனடியாகத் தங்கள் நிலத்திலும் சோதித்துப் பார்ப்பதில் நம் வாசகர்களுக்கு இணையில்லை. அவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி. பல பயிர் சாகுபடி பற்றி, பசுமை விகடனில் படித்ததுமே உடனடியாக அதைச் செயல்படுத்தியுள்ளார். இப்பொழுது, பயிர் நன்றாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் பொழுது நம்பிக்கையாக இருக்கிறது என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு பேசத் தொடங்கினார் பழனிச்சாமி.

இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். தண்ணீர்ப்பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் என்று ஏகப்பட்டத் தொல்லைகள். இதற்காக தவித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் பசுமை விகடன் படிக்க ஆரம்பித்தார். அதன் மூலமாக, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்' வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, 'வானகம்’ பண்ணையில் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரிடம் பயிற்சி எடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதம் வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்பும் படித்து, இயற்கை விவசாயத்தை ஆரம்பித்துள்ளார்.

நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மண்புழு மன்னாரு,  மூன்று பேரும்தான் இவருக்கு குரு. நிலத்தில் துளிகூட ரசாயனம் பயன்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் மட்டும்தான். 60 சென்ட் நிலத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, வெங்காயம், சுரைக்காய் என்று நிறைய காய்கறிகளை விதைத்திருக்கிறார். இவர் வைத்திருந்த பாரம்பரிய ரக விதைகளைத்தான் நாத்துப் பாவி நட்டிருக்கிறார். எல்லா செடிகளும் தளதள என்று வளர்ந்து நிக்கிறது என்று உற்சாகமாகச் சொன்னார்.

60 சென்டில் 60 பயிர்கள் !
தொடர்ந்து பேசியவர், சாகுபடி செய்யும் முறைகள் பற்றி விவரித்தார். சாகுபடியை ஆரம்பிக்கும் முன்பாக நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டிருக்கிறார். பிறகு மண்ணைக் கொத்தி  பொலபொலப்பாக்கி சதுரப்பாத்தி எடுத்து, 30 சென்ட் நிலத்தில் இரண்டடிக்கு ஒரு நாற்று என்று தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகளை அடுத்தடுத்து நட்டிருக்கார். மீதி 30 சென்ட் நிலத்தில் மற்ற பயிர்களையும் கலந்து நடவு செய்திருக்கிறார். ஓரமாக இருந்த ஐந்தாறு வேப்ப மரங்களைச் சுற்றி, பாகற்காய், பூசணி மாதிரியான கொடிவகைப் பயிர்களை நடவு செய்து, கொடிகளை மரத்தில் ஏற்றி விட்டிருக்கிறார். பீர்க்கனை நடவு செய்து அதற்கு மட்டும் பந்தல் போட்டிருக்கிறார். கோடையில் வளரும் பீர்க்கன், குளிர்காலத்தில் வளரும் பீர்க்கன் என்று இரண்டு ரகமுமே இங்க இருக்குகிறது. அதே மாதிரி, குத்து அவரை, தம்பட்ட அவரை என்று அனைத்தும் உள்ளது.

இரண்டு சென்ட் நிலத்தில் வெண்டை இருக்கிறது. ஒவ்வொரு செடியும் மரம் மாதிரி பத்தடிக்கு வளர்ந்து நிக்கிறது. இதுபோக சிறுகீரை, சிவப்புக்கீரை, மிளகு தக்காளி, முருங்கை, அகத்தி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பூனைக்காலி என்று கிட்டத்தட்ட 60 சென்டில் 60 வகையானப் பயிர்கள் இருக்கிறது என்று சொல்லி தொடர்ந்தார்.
தோட்டத்தைச் சுற்றி 6 அடி இடைவெளியில் ஆமணக்குச் செடியை நட்டிருக்கிறார். இது மூலமாக சின்ன வருமானம் கிடைப்பதோடு காய்கறிச் செடிகளை தாக்குற பூச்சிகளும் கட்டுப்படுகிறது. இந்த விதைகளை இடிச்சு தண்ணீரில் கலந்து வயலில் ஆங்காங்கே வைத்தால் பூச்சியெல்லாம் அதற்குள் விழுந்துடும். வயலில் ஆங்காங்கே பறவை தாங்கி வைத்தால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

தேவையான அளவு தண்ணி பாய்ச்சுவதோடு, 15 நாளைக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தோட்டம் முழுசும் தெளிக்கிறார். பூச்சித் தாக்குதல் இருந்தால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்கதாக கூறுகிறார். களைகளை எல்லாம் பறிச்சு, அங்கேயே மூடாக்காக போட்டுவிடுவதால், மண்ணின் ஈரப்பதம் இருந்துக்கொண்டே இருக்கிறது. பெரிதாக எந்தப் பராமரிப்பும் கிடையாது. வீட்டுத் தேவைக்காகத்தான் காய்கறிகளை சாகுபடி செய்கிறார். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை உள்ளூர் கடையிலேயே விற்கிறார். இப்பொழுது, இவர்களுக்கு காய்கறிச் செலவே இல்லாமல் போய்விட்டது என்கிறார். சத்தான, இயற்கை காய்கறிகளை கிடைப்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்று சொல்லி, மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார், பழனிச்சாமி.

தொடர்புக்கு,
பழனிச்சாமி,
செல்போன்: 94438-39926

40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...

ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
'பசுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே சென்றோம்.

 மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க’த்தின் தலைவர். ''இவர்கள் இந்தளவு முன்னேறியதற்கு முக்கியமான காரணம் 'பசுமை விகடன்’தான் என்கின்றனர். அதில் வரும் கட்டுரைகளைப் பற்றி ஊருக்குள் நண்பர்கள்கிட்ட அடிக்கடி பேசுவோம். அப்படிப் பேசும்போதுதான், 'நாம ஒண்ணா சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யலாமே’என்ற எண்ணம் தோன்றியது. அதில் உருவானதுதான் இவர்கள் சங்கம்.

அதற்கான வேலைகளில் நாங்கள் இறங்கியபோது எங்களைப் பற்றி செய்தி வெளியிட்டு, எங்களை ஊக்கப்படுத்தினது பசுமை விகடன்தான் என்கின்றனர். அதற்குப்பிறது நிறைய பேர் இவர்களிடம் பேச ஆரம்பித்தாக கூறுகின்றனர். அதனால், இவர்களுக்கான பொறுப்பு அதிகமானதாக கூறுகின்றனர். அந்த ஊக்கத்தில்தான் இவர்கள் இன்னமும் ஆர்வமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இப்போது இவர்கள் சங்கத்தில் 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற சிவலிங்கம் தங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.

ஆரம்பத்தில் அரை ஏக்கர் இப்பொழுது ஒன்றரை ஏக்கர்!
ஆரம்பத்தில், குறைந்தபட்சம் அரை ஏக்கரில் மட்டுமாவது இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று இறங்கினோம். ஆனால், இப்பொழுது, ஒவ்வொருத்தரும் ஒன்றரை ஏக்கருக்கும் குறையாமல் இயற்கை முறையில சாகுபடி செய்வதாக கூறுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளா என்று வெளியே அனுப்புகிறார்கள். எல்லோரும் கலந்து பேசி , ஒவ்வொருத்தரும் இந்த இந்த காய் என்று பிரித்து வைத்து சாகுபடி செய்கிறார்கள்.

பாகங்களாகப் பிரித்து சாகுபடி!
தன்னோட நிலத்தை நாற்பது சென்ட் அளவில் தனித்தனி பாகமாகப் பிரித்து வைத்திருக்கிறார். அதில் ஒரு பாகத்தில் சுரைக்காய் போட்டிருக்கிறார். இப்பொழுது முழுவதுமாக அறுவடை முடிந்திருக்கிறது. அது முடியும்போது அறுவடைக்கு வருவது போல்  மற்றொரு பாகத்தில் பாகல் போட்டிருக்கிறார். இப்பொழுது இதோடு அறுவடை முடியும் தருவாயில் இருக்கிறது. இதேபோல் புடலங்காய், பீன்ஸ் என்று ஒவ்வொரு பாகத்திலேயும் ஒவ்வொன்றாக பிரித்து போட்டிருக்கிறார்.

வாரத்துக்கு 3,500 ரூபாய் லாபம்!
ஒவ்வொரு காய் அறுவடை முடியும்பொழுதும் இன்னொரு காய் அறுவடைக்கு வந்துவிடும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்களும் கிடைக்கும். சுரைக்காயில் மட்டும் நான்கு மாதத்தில் மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது. ஒரு காயில் கிடைகின்ற லாபத்தை வைத்தே, இன்னொரு காய்க்கு செலவிடலாம். ஒவ்வொரு காயிலேயும் இனைத்து செலவும் போக வாரத்துக்கு, சராசரியாக 3 ஆயிரத்து 500 ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கிறது. இதேமாதிரி சுழற்சி முறையில்தான் எல்லாருமே சாகுபடி செய்வதாக கூறுகிறார்கள்.

இயற்கை இடுபொருட்கள்!
அடியுரமாக தொழுவுரம்தான் போடுகிறார்கள். சுற்று வட்டாரத்தில் எங்க கிடைத்தாலும், தொழுவுரத்தை வாங்கிட்டு வந்து இருப்பு வைக்கிறார்கள். தேவைப்பட்டால் புங்கன்கொட்டை, ஆமணக்கு, வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு என்று ஏதாவது ஒன்றை அதில் கலந்து, வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கொடுக்கிறார்கள். பூ உதிர்ந்தால் மோர், டிரைக்கோடெர்மா விரிடி இரண்டையும் கலந்து தெளிக்கிறார்கள். முட்டையின் வெள்ளைக்கரு, வேப்பெண்ணெய், காதி சோப் இது மூன்றையும் கலந்தும் தெளிக்கலாம்.

அக்னி அஸ்திரத்துக்கு ஈடு இணை இல்லை!
காய்கறிச் செடிகளில் பெரும்பாலும் அசுவிணி, பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகளோடு தொல்லை அதிகமாக இருக்கும். பொதுவாக பூச்சிகள் வருவதற்கு முன்பே ஐந்திலைக் கரைசலைத் தெளித்தி விடுவதாக கூறுகிறார்கள். இதைத் தெளித்தபின் எந்தப் பூச்சியும் தாக்குவதில்லை. அதையும் மீறி வரும்பொழுது அருவாமனைப் பூண்டுகளைப் பிடுங்கி வந்து அரைத்து, சாறு எடுத்து 1:10 விகிதத்தில் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்கிறார்கள். இதையெல்லாம் கடந்தும் பூச்சி பாதிப்பு இருந்தால், கடைசி ஆயுதம் 'அக்னி அஸ்திரம்’தான். பாதிப்புக்கேத்த அளவுக்கு இதை அடித்தால் ஒரு பூச்சி, இருக்காது. இதற்கு அடங்காத பூச்சிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற சிவலிங்கத்தைத் தொடர்ந்தார் சங்கத்தின் செயலாளரான கொட்லுமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்.

மாயம் செய்த பஞ்சகவ்யா!
இவர் 30 சென்டில் சுரைக்காய் போட்டிருக்கிறார். விளைச்சல் சமயத்தில் காய்களைப் பார்த்து கண் போடாத ஆட்களே இல்லை. ஏனென்றால், இவரேட மண் நுரம்பு மண். இப்படிப்பட்ட மண்ணில், இந்த அளவுக்கு விளைந்ததுக்கு காரணமே பஞ்சகவ்யா தான். இப்போ இரண்டு ஏக்கரில் தர்பூசணி போட்டிருப்பதாக கூறுகிறார்.
உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாம் விலை ஏறுவதைப் பற்றி இவர்கள் கவலைபடுவரில்லை. ஆள் பிரச்னை மட்டும்தான் இவர்களது ஒரே கவலை என்கிறார். ஆனாலும், தாங்களே ஓடியாடி உழைத்து சரி செய்வதாக கூறுகிறார். அதற்கேற்ற மாதிரி இவர்களுக்கு லாபமும் கிடைக்கிறது.

கலெக்டரும், வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பாப்பிரெட்டிப்பட்டி கே.வி.கே. மையத்தினரும் நன்றாக உதவி செய்வதாக கூறுகிறார். அது இவர்களுக்கு கூடுதல் பலம்'' என்று நன்றி பெருக்கோடு சொன்னார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல, தாங்கள் மட்டும் இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருக்காமல், அக்கம் பக்கமிருக்கும் விவசாயிகளுக்கும் அதன் பலன் சென்று சேரும் வகையில், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் செயல்பட்டுக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. தொட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், இரண்டரை ஏக்கரை இயற்கை முறை சாகுபடிக்கு என ஒதுக்கி இருக்கிறார்.

தினந்தோறும் டீக்கடைகளில் அமர்ந்து இயற்கை விவசாயம் குறித்து ராஜேந்திரன் நடத்தும் பிரசங்கத்தால் கவரப்பட்ட ஆசிரியர் ஒருவர், தற்போது மெள்ள இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி தன் எட்டு ஏக்கர் நிலத்தையும் இயற்கையின் பக்கம் திருப்பி விட்டார். இவருடைய நிலத்தில் இயற்கை விவசாயத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, பெல்ட் அவரை என சாகுபடி செய்கிறார்.

இச்சங்கத்தினர் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒவ்வொருவரின் அனுபவத்தையும் அலசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு உறுப்பினரும் சந்தா தொகையாக நூறு ரூபாயை வழங்குகின்றனர். இப்படி சேரும் மொத்தத் தொகையை இவர்களுக்குள்ளாகவே குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர்.

தொடர்புக்கு,சிவலிங்கம்,
செல்போன்: 97875-45231.

உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்..வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி..

இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலேயும் இவர் கலந்து கொண்டதில்லை என்கிறார். முழுக்க முழுக்க 'பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படித்து விவசாயம் செய்கிறார். வாழையை மட்டுமே தனிப்பயிராக சாகுபடி செய்துகிறார். இவர், ஊடுபயிரையும் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று திருப்தியோடு சொல்கிறார், திருப்பூர் மாவட்டம், வே. வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசிவமூர்த்தி.

இரண்டு நாள் கணிப்பொறி... ஐந்து நாள் கழனி!
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த முடித்து, நண்பர்களோடு சேர்ந்து திருப்பூரில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறார். வாரத்தில் இரண்டு நாட்கள்தான் அந்த வேலை. மீதி ஐந்து நாளும் விவசாயம்தான். பசுமை விகடனின் மகசூல் கட்டுரைகளில் வரருகின்ற விவசாயிகள்கிட்ட உடனடியாக பேசி, புதுப்புது விஷயங்களைத் தெரிந்து கொள்வதாக கூறுகிறார். முடிந்தளவுக்கு அந்தத் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்துதான் வெள்ளாமை செய்வதாக கூறுகிறார்.

உற்சாகம் கொடுத்த ஊடுபயிர் கட்டுரை!

2010 ஜனவரி 10-ம் தேதி இதழில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த போஸ் பற்றி வந்திருந்த செய்தியில்தான் வாழையில் உளுந்து, புடலை, தட்டை மாதிரியான ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம் என்று தெரிந்து கொண்டதாக கூறுகிறார். அதுவரைக்கும் வாழையை மட்டுமே தனியாக சாகுபடி செய்துகொண்டிருந்த இவர் ஊடுபயிர் பக்கம் மாறுவதற்கு காரணமாக அமைந்தது அந்தக் கட்டுரை.

வெங்காய பூமி!
இவரின் நிலத்தில் நல்ல தண்ணீர் வசதியும் இருக்கிறது. தென்னை, வாழை, வெங்காயம் மூன்றும் நன்றாக வளருகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலும், இவர் பகுதியிலயும்தான் பெரிய வெங்காயம் அதிகமா விளைகிறது. ஆரம்பத்தில் வெங்காயத்தை மட்டும்தான் சாகுபடி செய்திருக்கிறார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள், வாழை என்று மாறியிருக்கிறார். இப்பொழுது, ஒன்றரை ஏக்கரில் நேந்திரன் வாழை போட்டிருக்கிறார். அதில் ஊடுபயிராக நாட்டு ரக தட்டைப்பயறு இருக்கிறது. இப்பொழுது அறுவடை நடக்கிறது. ஊடுபயிராக இதை சாகுபடி செய்யும்பொழுது, களைகள் வருவதில்லை. அதோடு உயிர் மூடாக்காவும் பயன்படுகிறது. இதன் இலைகள் மட்கி உரமாகிறது. அறுவடை செய்தபின் காய்ந்த செடியை ஆடு, மாடுகளுக்கும் கொடுக்கலாம் என்ற ஞானசிவமூர்த்தி, சாகுபடிக் குறிப்புகளைச் சொல்லத் தொடங்கினார்.

மேட்டில் தட்டை, பள்ளத்தில் வாழை!
நிலத்தை சரி செய்து, 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு, நாலரையடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு நீளமான மேட்டுப்பாத்திகளை வரிசையாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி விட வேண்டும். பாத்தி அமைக்கும்போது இந்த இடைவெளி பள்ளமாக இருப்பதால், இதை வாய்க்காலாகப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம்.
பிறகு, வாய்க்கால் மத்தியில் வாழைக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்போது வரிசைக்கு வரிசை ஆறடியும், மரத்துக்கு மரம் ஆறடியும் இடைவெளி இருக்கும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1200 கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். (இவர் 900 கன்றுகள் மட்டுமே நடவு செய்துள்ளார்.)

வாழைக்கன்றை நடவு செய்யும்போதே மேட்டுப்பாத்தியில் முக்கால் அடி இடைவெளியில் தட்டைப் பயறு விதைகளை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 12 கிலோ முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து, வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். தட்டைப்பயறின் மகசூல் காலம் 60 முதல் 75 நாட்கள். 40 நாட்களில் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து அதிகாலை நேரத்தில் தோட்டம் முழுவதும் செழிம்பாக பனிப்புகை போலத் தெளிக்க வேண்டும். காய் பருவத்தில் பத்து லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் அக்னி அஸ்திரம் என்ற அளவில் கலந்து தெளித்தால், பச்சைப்புழுக்கள் தாக்குதல் இருக்காது. 75 நாட்களில் தட்டையை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

குறைவான அளவில் கோழி எரு
தட்டைப்பயறு அறுவடை முடிந்த பிறகு மண்வெட்டியால் வாய்க்கால் வரப்புக்களை எடுத்துக்கட்டி, வாழை மரங்களுக்கு மண் அணைத்து விட வேண்டும். பிறகு, ஒரு டன் கோழி எருவைப் பாசனத் தண்ணீரில் கரைத்து விட்டு வரப்பு உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். கோழி எரு அதிகக் காரத்தன்மை கொண்டது என்பதால், அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. மரங்கள் வளர்ந்து நிழல் கட்டத் தொடங்கிய பிறகு களைகள் வளராது. 9-ம் மாதத்துக்கு மேல் பூவெடுக்கும். காய் பிடிக்கும் சமயத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 12-ம் மாதம் வாழைத்தார்களை அறுவடை செய்யலாம். சாகுபடிப் பாடத்தை முடித்த ஞானசிவமூர்த்தி, இப்போதான் பகுதி நிலத்தில் தட்டைப்பயறு அறுவடை முடிந்திருக்கிறது.

200 கிலோ வரைக்கும் மகசூல் கிடைத்திருக்கிறது. மொத்தத்தையும் அறுவடை செய்தால் 500 கிலோ அளவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார். இப்போதைக்கு கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறது. இந்தக் கணக்குப்படி தட்டைப்பயறு மூலமாக 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வாழை அறுவடை செய்யும்பொழுது ஒரு தார் 200 ரூபாய் என்ற விலைக்கு 900 தார்கள் மூலமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமாக, 41 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். ஊடுபயிராக தட்டைப்பயறு போட்டதால் களையெடுக்கும் செலவு குறைந்ததோடு, கூடுதல் வருமானமும் கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,சு. ஞானசிவமூர்த்தி,
செல்போன்: 98422-69257.

இறையியலோடு உழவியலும்..சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்!

'ஏர் பிடிக்கும் உழவனின் குடிசையில் இருந்து, புதிய பாரதம் வெளி வரட்டும்’ என்று சொன்னார், சுவாமி விவேகனந்தர். அவருடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்திருக்கும் சாரதா ஆசிரமத்தைச் சேர்ந்த துறவிகள்.  திரும்பிய திசையெல்லாம் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் அமைதியான அந்த ஆசிரமத்தில், ஆங்காங்கு பணி செய்து கொண்டிருக்கிறார்கள், காவி மற்றும் வெள்ளை நிறங்களில் ஆடையணிந்த சகோதரிகள். இங்கு, உழவுப் பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக 'அக்ஷய கிருஷி கேந்திரா’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் மூலமாக சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு இறையியலோடு, உழவியலையும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

அதைப் பற்றி நம்மிடம் உற்சாகமாகப் பேசினார், கிருஷி கேந்திராவின் இயக்குநர் எத்தீஸ்வரி ஆத்ம விகாச பிரியா அம்பா இவர்கள் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம், கல்லூரி, குருகுலம் என்று தனித்தனித் துறைகள் இருக்கிறது. ஆசிரமத்துக்குச் சொந்தமாக எண்பது ஏக்கர் நிலம் இருந்ததால், 'விவசாயம் பண்ணலாம் என்று ஆசிரமத்தோட தலைவர் சொல்ல, உடனே, மண் பரிசோதனை செய்ததில, இந்த நிலத்தில் சப்போட்டாவை மட்டும்தான் பயிர் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். மண் சரியில்லை என்று  நாமளே இப்படி விட்டுடக் கூடாது’ என்று முடிவு செய்து எல்லோரும் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். ரசாயன முறை, இயற்கை முறை என்று இரண்டு முறையிலும் நெல் சாகுபடியை ஆரம்பிசத்துள்ளனர். ஆரம்பத்தில் ரசாயன முறையில அதிக மூட்டை கிடைத்தாலும், போகப் போகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. அதேசமயத்தில், இயற்கை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. மூன்று வருடத்திலேயே, இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்து, அந்த மூன்று வருடத்தில் ரசாயன உரங்களுக்கு மட்டும் நாலரை லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்கிறார்கள்.

2004-ம் வருடத்தில் இருந்து இவர்கள் ஆசிரமத்துக்கு 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அடிக்கடி வர ஆரம்பித்தார். அவர் மூலமாக, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக கூறுகிறார்கள். கடன் இல்லாத, நஞ்சு இல்லாத, மண் வளம் இழக்காத, நீர் வளம் குன்றாத நிலைத்த நீடித்த விவசாயம்தான் இவர்கள் குறிக்கோள் என்று விகாச பிரியாவைத் தொடர்ந்தார், கேந்திராவின் உதவி இயக்குநர், சகோதரி சத்தியப்பிரனா. 'இவர்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமான சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பித்தது. ஆரம்பத்தில், நம்மாழ்வார் கட்டுரைகளுக்காக அதை வாசிக்க ஆரம்பித்துள்ளனர். பின்பு அதில் வந்த நிறைய விஷயங்கள் இவர்களுக்குத் தேவைப்பட்டதால்  தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.

அதில் வெளியான 'உழவுக்கும் உண்டு வரலாறு’, 'எந்நாடுடைய இயற்கையே போற்றி’, 'கிராம ராஜ்ஜியம்’, மகசூல் கட்டுரைகள், மண்புழு மன்னாரு, பண்ணைக் கருவிகள்னு எல்லாவற்றையும் தனித்தனியாக புத்தகங்களாக்கிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இங்கு வரும் விவசாயிங்களுக்கு அதை படிக்கவும் கொடுக்கிறார்கள்.
படிக்கிறதோடு மட்டும் விட்டுவிடாமல், 'பசுமை விகடனில் வரும் நிறையத் தொழில்நுட்பங்களை இவர்களோடு தோட்டத்தில் செயல்படுத்தி இருக்கிறார்கள். பெரும்பாலான பாரம்பரிய ரகங்களோடு பெருமைகளை இந்தப் புத்தகம் மூலமாகத்தான் தெரிந்துகொண்டு அந்த விதைகளைச் சேகரித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அந்த வகையில் இதுவரைக்கும் 27 பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்திருக்கிறார்கள்.  

இப்பொழுது, நெல், கரும்பு, உளுந்து, தட்டைப்பயறு, கருவேப்பிலை, மா, தென்னை, மரவள்ளி என்று நிறைய பயிர்களை சாகுபடி செய்திருக்கிறார்கள். அதோடு, ஆசிரமத் தேவைக்காக 100 கறவை மாடுகளையும் வளர்க்கிறார்கள். அசோலா வளர்ப்பு, பூச்சி, நோய் தாக்குதல் விளக்கப்படம், விதை மையம், வானிலை முன்னறிவுப்புக் கருவி, மண்புழு உரத்தொட்டி, மழை நீர் சேகரிப்பு மையம் விவசாயிகளுக்குத் தேவையான நிறைய விஷயங்களை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலமாக, இவர்ள் ஆசிரமத்தைச் சுற்றியிருக்கிற இருபத்தைந்து கிராம விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விவசாய முறைகளைத் தெரிந்துகொள்ள உதவுவதோடு, மற்ற விவசாயிகளுக்குச் சொல்லித் தருவதற்க்கும் 'பசுமை விகடன்'தான் உதவியாக இருக்கிறது என்று சொன்னார் சத்தியப்பிரனா.

தொடர்ந்து பேசிய ஆசிரமப் பண்ணையின் மேலாளர் சிவக்குமார், 20 ஏக்கரில் ஒரு போகம் நெல் சாகுபடியும், 16 ஏக்கரில் இரண்டு போகம் நெல் சாகுபடியும் செய்கிறார்கள். இந்த வருடம், சோதனை முயற்சியாக 5 ஏக்கரில் மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பா என்று 27 பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிர் செய்திருக்கிறார்கள். அதில்லாமல் தனியாக 15 ஏக்கரில் 'டீலக்ஸ்’ பொன்னி நடவு செய்திருக்கிறார்கள்.
அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், முட்டைக் கரைசல், மண்புழு உரம், பிண்ணாக்கு... மாதிரியான இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்திட்டிருக்கோம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த புகையிலைக் கரைசலைப் பயன்படுத்திட்டிருக்கோம். நெல் வயல்ல களைகளைக் கட்டுப்படுத்துறதுக்காக அசோலாவை வளர்க்கிறோம். கறவை மாடுகளுக்கு அசோலாவைக் கொடுக்கிறோம். இதன் மூலமா பால் அளவு கூடுறதோட, மாடுகளும் ஆரோக்கியமா இருக்கு'' என்று சொன்ன சிவக்குமார், ''பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபது மூட்டையில இருந்து முப்பது மூட்டை (75 கிலோ) வரைக்கும் மகசூல் கிடைக்குது. மத்த நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபத்தஞ்சு மூட்டையில இருந்து முப்பது மூட்டை வரைக்கும் மகசூல் கிடைக்குது'' என்று வரவுக் கணக்கையும் லேசாகத் தொட்டார்!

தொடர்புக்கு சத்தியப்பிரனா,
செல்போன்: 97868-91110.
சிவக்குமாணீர்,
செல்போன்: 99430-64596.

இன்ப அதிர்ச்சி தரும் இருமடிப் பாத்தி !

இருமடிப் பாத்தி... உழவு, உரம் என்று பலவிதமானச் செலவுகளையும் குறைப்பதோடு, கூடுதலான லாபத்தையும் தரக்கூடிய இயற்கையான ஒரு தொழில்நுட்பம். இதன் பலனை, அனுபவித்துப் பார்த்தவர்களால்தான் சிலாகித்துச் சொல்ல முடியும். இதோ சிலாகிக்கிறார், திருச்சி மாவட்டம், துறையூர் தாலூகா, செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசண்முகம். இவர், வேளாண் பொறியியல் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே... விவசாயத்தையும் கையில் எடுத்திருப்பவர். முக்கியமாக, 'இயற்கை விவசாயக் காதலர்' என்பது குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம்! ''எனக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கரில் நெல் இருக்கு. இரண்டு ஏக்கரில் சின்னவெங்காயம் போட்டிருக்கிறேன். 20 சென்ட் நிலத்தில் மஞ்சள், கருணைக்கிழங்கு போட்டிருக்கிறேன். 5 சென்ட் நிலத்தில் காய்கறி போட்டிருக்கிறேன். ஐந்து வருடமாக இயற்கை விவசாயம்தான்'' என்று முகவுரை தந்த சிவசண்முகம்,

''எப்பவும் வழக்கமான முறையில் பார் பிடித்துதான் வெங்காய நடவு செய்வேன். போன முறை, சோதனை முயற்சியாக... 75 சென்ட் நிலத்தில் மட்டும் இருமடிப் பாத்தி எடுத்து, வெங்காயம் போட்டேன். இயற்கை முறையில் செய்வதால் வழக்கமாக விளைச்சல் நல்லாவேதான் இருக்கும். இந்த முறை இருமடிப் பாத்திங்கற விஷயத்தையும் சேர்த்து செய்ததால்... கூடுதல் மகசூல். இதைப் பார்த்துவிட்டு, சுத்துப்பட்டு விவசாயிகள் அசந்துட்டாங்க. நல்ல நிறமாகவும் திரட்சியாகவும் இருக்கு வெங்காயம். நீர்ச்சத்தும் அதிகமாக இருப்பதால்... அதிக நாளைக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்!

இருமடிப் பாத்தியில் செலவு குறைவு!
வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்போது... அதிகளவில் பிண்ணாக்கு, மேலுரம் என்று ஊட்டம் கொடுக்கணும். அதேமாதிரி களை எடுக்கற செலவும் அதிகமாக இருக்கும். இருமடிப் பாத்தி அமைக்கும்போது செலவு குறைவதோடு, வேலையும் குறைவு'' என்றவர், 75 சென்ட் நிலத்திற்க்கான இருமடிப் பாத்தி சாகுபடி முறை பற்றி விளக்க ஆரம்பித்தார். 'தேர்வு செய்த நிலத்தில், முக்கால் அடி ஆழத்துக்கு உழவு ஓட்ட வேண்டும். 20 அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் தெளிப்புநீர்க் குழாயைப் பதிக்க வேண்டும். தெளிப்புநீர்த் திறப்பான், 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். 20 அடி தூரத்துக்கு ஒரு திறப்பான் அமைத்தால் போதும்.

4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்துக்கு மண்ணைப் பறித்து, இருபுறமும் ஒதுக்கி வைக்க வேண்டும். குழியின் உள்ளே கடப்பரையால் குத்தி, மண்ணைக் கிளற வேண்டும். பிறகு, குழிக்குள் பாதி உயரத்துக்கு, கம்பஞ்சக்கை, எள்ளு சக்கை, மக்காச்சோள சக்கை மற்றும் இலை, தழைகள் என அனைத்தையும் போட்டு, அதன் மீது தொழுவுரத்தையும் போட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகு, மேல் மண்ணைப் பரப்ப வேண்டும். இப்போது, தரையில் இருந்து முக்கால் அடி உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டிருக்கும். இதுபோல், இரண்டு அடி இடைவெளியில் வரிசையாகப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பலதானிய விதைப்பு!
பாத்திகளில் சணப்பு, அவுரி, கம்பு, சோளம், எள், பச்சைப் பயறு, தட்டைப் பயறு உள்ளிட்ட பலதானிய விதைகளை சமவிகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். 75 சென்ட் நிலத்துக்கும் சேர்த்து மொத்தமாக, 15 கிலோ விதை தேவைப்படும். அனைத்துப் பாத்திகளுக்கும் பொதுவாக... 10 அடி இடைவெளிக்கு ஒரு விதை வீதம் ஆமணக்கு விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து இருபது நாட்களுக்கு ஒரு முறை 7 லிட்டர் அமுதக்கரைசலை, 70 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியின் மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

அமுதக்கரைசல் மட்டும் போதும்!
இரண்டு மாதங்களில் பலதானியப் பயிர்கள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஆமணக்குச் செடியை தொந்தரவு செய்யாமல், பலதானியப் பயிர்களை மட்டும் வேரோடு பறித்து, பாத்தி முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மீது கம்பு, எள், மக்காச்சோளச் சக்கைகளைப் போட்டு மூடாக்கு அமைத்து, அரை அடி இடைவெளிக்கு ஒரு விதை வெங்காயம் என்கிற கணக்கில் ஊன்ற வேண்டும். மூடாக்கின் மீது அழுத்திப் பதியுமாறு ஊன்றினால், போதுமானது. பலதானியத்துக்குத் தெளித்தது போலவே, தொடர்ந்து அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த ஒரு மாதத்திற்க்குள் களைகள் முளைத்தால், அவற்றைக் கைகளால் நீக்க வேண்டும். அதன் பிறகு பெரும்பாலும் களைகள் முளைப்பதில்லை. நடுவில் நடவு செய்யப்பட்டுள்ள ஆமணக்குச் செடிகள் வெங்காயச் செடிகளை பனி மற்றும் வெப்பத்திலிருந்து காப்பாற்றுகின்றன. தவிர, உதிரும் ஆமணக்கு இலைகள் உரமாகவும் பயன்படுகின்றன. நடவு செய்த 70-ம் நாளுக்கு மேல், சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.''

64 ஆயிரம் லாபம்!
''75 சென்ட் நிலத்திலிருந்து 4,500 கிலோ வெங்காயம் கிடைத்தது. ஒரு கிலோ வெங்காயம், 18 ரூபாய் என்று விற்றதில், 81 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 17 ஆயிரம் ரூபாய் செலவு போக, மீதி 64 ஆயிரம் ரூபாய் லாபம். ஊடுபயிராக போட்டிருந்த ஆமணக்கு மூலமாக 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வெங்காயம் அறுவடை முடிந்ததும், பாத்தியோட இரண்டு ஒரத்திலையும் மிளகாய் போட்டேன். ஒரே மாதத்தில் பூ பூத்து காய்க்கத் தொடங்கி விட்டது. இப்போது அதில் கடலையையும் நடவு பண்ணப் போறேன்'' என்றார்.

கோழிக்கால் நோய் இல்லவே இல்லை!
''இருமடிப் பாத்தியை ஒரு தடவை அமைத்தால், வருடக் கணக்காக சாகுபடி செய்துக்கலாம். ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை மூடாக்கை மட்டும் முழுமைப்படுத்தினால் போதும். உழவு, அடியுரம், பார் அமைக்கும் செலவெல்லாம் மிச்சம். பொதுவாக, வெங்காயத்தில் செம்பேன் தாக்குதலும், கோழிக்கால் நோயும்தான் பெரிய பிரச்னை. பெரியளவில் மகசூலை பாதித்துவிடும். ஆனால், மேட்டுப்பாத்தி முறையில் இந்தப் பிரச்சனைகள் கொஞ்சம்கூட இல்லை. அதேமாதிரி மழையால் வரும் பாதிப்புகளும் கம்மிதான். வழக்கமான முறையைவிட, ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் செலவைக் குறைச்சிருக்கு இந்த இருமடிப் பாத்தி. இனிமேல் இரண்டு ஏக்கரிலும் இருமடிப் பாத்தி அமைத்துதான் வெங்காயம் பயிர் செய்ய போகிறேன்'' என்றார்

தொடர்புக்கு
சிவசண்முகம்,
செல்போன்: 94433-02650. 

நெல்லியில் இருக்கு... நூறு நுட்பம் !

'எல்லாரும் செய்வது மாதிரிதானே நாமளும் விவசாயம் செய்கிறோம்... ஆனால், நமக்கு மட்டும் ஏன் சரியாக மகசூல் கிடைப்பதில்லை?’ என்கிற கேள்வி, இங்க ஏகப்பட்ட விவசாயிகளுக்கு எழாமல் இருப்பதில்லை. 'உரம், பூச்சிவிரட்டி, தண்ணீர், இயற்கைச் சூழல் என்பனவற்றையும் தாண்டி, பல்வேறு நுணுக்கங்களும் ஒளிந்து கிடக்கின்றன... பயிர்த் தொழிலில்' என்பதுதான், அனுபவசாலிகளின் கருத்து. அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் நுணுக்கங்களை எல்லாம், ஒவ்வொரு பயிரிலும் நன்கு அனுபவப்பட்ட விவசாயிகள், இதழ்தோறும் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்... பசுமை டாக்டராக! ஆம், விவசாயியின் நிலத்துக்கு நேரடியாகச் சென்று, அங்கே உள்ள பயிரில் இருக்கும் பிரச்னை, மண்ணின் பிரச்னை, இயற்கைச் சூழலால் வரும் பிரச்னை, தேவையான ஊட்டம், அந்தத் தோட்டத்துக்கென்றே இருக்கும் பிரத்யேக பிரச்னை என்று அனைத்து விஷயங்களையும் அலசி, நல்ல மகசூல் பெறுவதற்கான வழிகாட்டுதலைத் தரப் போகிறார்கள்.

திண்டுக்கல் அருகே இருக்கிறது, குட்டியப்பட்டி கிராமம். விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக வடிவெடுக்க... 'மரப்பயிர்தான் ஒரே தீர்வு' என்று 40 ஏக்கர் நிலத்தில் நெல்லியை நடவு செய்தார் இந்த ஊரைச் சேர்ந்த பசும்பொன். வழக்கமாக மூன்றாம் ஆண்டு முதல் காய்க்க வேண்டிய நெல்லி, இவருடைய தோப்பில் நான்கு வருடமாகியும் காய்க்கவில்லை. அத்துடன் செடிகளும் வளர்ச்சியில்லாமல் குன்றியே இருந்தன.இந்நிலையில் எதேச்சையாக இவருடைய தோப்புக்கு வந்த ஜல்லிபட்டியைச் சேர்ந்த நெல்லி விவசாயியான ஜெயக்குமார் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதன்படி செயல்பட்டதின் விளைவு, தற்போது காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது பசும்பொன்னுடைய தோப்பு.காய்க்காத மரங்கள் எப்படி காய்த்தன... ஜெயக்குமார் தந்த ஆலோசனைகள் என்னென்ன... என்பவற்றைத் தெரிந்துகொள்வதோடு, மேற்கொண்டும் நெல்லித் தோப்பில் கடைபிடிக்க வேண்டியத் தொழில்நுட்பங்கள் எவையெவை என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், பசும்பொன்னுடைய தோப்புக்கே ஜெயக்குமாரை வரவழைத்தோம்...

''மரப்பயிருக்குத் தாவிடலாம்னுதான் நெல்லி விவசாயத்துக்கு மாறினேன். ஆனா, நான் நினைத்த மாதிரி நெல்லி விவசாயம் அவ்வளவு சுலபமாக இல்லை. நடவு செய்து மூன்று வருடத்தில் காய்க்கும் என்று சொன்னாங்க. மூன்று வருடமாகியும் காய்ப்பும் இல்லை... வளர்ச்சியும் இல்லாமல் நின்ற செடிகளைப் பார்க்கப் பார்க்க மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. 'ஏண்டா நெல்லியைப் போட்டோம். பேசாமல் காட்டை அழிச்சுட்டு, வேற வெள்ளாமைக்குப் போயிடலாம்' என்று முடிவே பண்ணிட்டேன். அந்த நேரத்தில்தான்  ஜெயக்குமாரை சந்திக்கற வாய்ப்பு கிடைத்தது.
என் தோப்புக்கு வந்து மரங்களைப் பார்த்துவிட்டு, செடி வளராமல் இருக்கறதுக்கான காரணத்தை இவர் சொன்னதும்தான்... விஷயமே எனக்கு உறைத்தது. நெல்லி சாகுபடியில் இத்தனை நுணுக்கம் இருக்கிற விஷயமே அப்பத்தான் தெரிந்தது. தொடர்ந்து அப்பப்ப வந்து ஆலோசனை கொடுத்துட்டு இருக்கார். அவர் சொன்னபடி செய்ததில், போன வருடம் 70% காய்த்தது. இந்த வருடம் பூ பிடித்திருப்பதைப் பார்த்தால்... 90% மகசூல் இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றவரிடம், ''ஜெயக்குமார் முதலில் சொன்ன நுணுக்கங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க'’ என்று நாம் குறுக்கிட்டோம்.

''நான் சொல்றதைவிட அதை அவர்கிட்டயே கேளுங்க'' என்றார் பசும்பொன்., அந்த வித்தைகளைச் சொல்லத் தொடங்கினார், ஜெயக்குமார். ''முதலில், இது களிமண் பூமி. இதில் நெல்லியை நடவு செய்திருக்கக் கூடாது. அப்படியே செய்தாலும்... பாசன விஷயத்தில் கவனமாக இருக்கணும். ஆனால், நான் வந்து பார்த்தப்ப செடிகளை சுற்றி குளம் மாதிரி தண்ணீர் தேங்கியிருந்தது. செடி வளராத காரணம் அதுதான் என்று புரிந்தது. அதிகமா தண்ணீர் தேங்கியிருந்ததால், மண்ணுக்குள்ள காற்று போக வழியில்லாமல். வேரெல்லாம் சுவாசிக்க வழியில்லாமல் திணறிப் போனதால்தான் செடிகள் வளரவில்லை. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் காய்ச்சலும், பாய்ச்சலுமாகத்தான் பாசனம் செய்யணும். ஒரு மரத்திற்க்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 லிட்டருக்கு மேல் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதை எடுத்துச் சொன்னேன். உடனடியாக தண்ணீர் பாய்ச்சுறதைக் குறைச்சுக்கிட்டாரு. தண்ணீர் அளவாக கொடுத்ததும்... கொஞ்சம், கொஞ்சமாக செடிகள் எந்திரிக்க ஆரம்பித்தது. உடனே செடிக்கு 10 கிலோ தொழுவுரம் கொடுத்தோம். தளதள என்று வளர்ந்தது. அடுத்தடுத்து சின்னச்சின்ன நுட்பங்களை முறையாக கடைபிடிக்கவும் மரம் காய்க்கத் தொடங்கிவிட்டது'' என்ற ஜெயக்குமார், நெல்லியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை நடவு தொடங்கி மகசூல் வரை விரிவாகவே விளக்கினார்.

மழைக் காலத்தில் நடவு செய்யக்கூடாது!
பொதுவாக கன்றுகளை மழைக் காலத்தில் நடவு செய்வார்கள். ஆனால், நெல்லி சாகுபடிக்கு அப்படி செய்யக் கூடாது. வெயில் காலத்தில்தான் நடவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்தால், கன்றுகளை, நாற்றுப் பண்ணையிலிருந்து வாங்கி வரும்போது எப்படி செடி இருந்ததோ, அப்படியேதான் இருக்கும். வளர்ச்சி என்பது கொஞ்சம்கூட இருக்காது. நெல்லி நடவு செய்யத் தீர்மானித்தால்... மழைக் காலத்தில் இரண்டு கன அடி குழி எடுத்து, 10 கிலோ தொழுவுரத்தை மேல்மண்ணுடன் கலந்து கொட்டி நிறைத்துவிட வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் வெயில் காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), அந்தக் குழியில் கன்று நடவு செய்ய வேண்டும். நடவு செய்த உடன் தண்ணீர் கொடுக்க வேண்டும். என்.ஏ-7, கிருஷ்ணா, சக்கையா, பி.எஸ்.ஆர் ரகங்களை நடவு செய்வதாக இருந்தால், 20 அடி இடைவெளியும், தேர்வு செய்யப்பட்ட ரகமாக (செலக்சன் ரகம்)  இருந்தால், 15 அடி இடைவெளியும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 20-ம் நாள் புது இலைகள் துளிர்க்கும். மழைக் காலத்தில் நடவு செய்தால், புதுத் தளிர் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒட்டுப் பிரிப்பதில் கவனம்!
புது இலைகள் வந்து, செடியின் மேல்பக்கம் வரை உயிரோட்டம் வந்ததும், செடியின் ஒட்டுப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பேப்பரை அகற்றிவிட வேண்டும். சிலர் அஜாக்கிரதையால் இதைச் செய்வதில்லை. அதனால் ஒட்டு வளர்வதற்கு பதில், தாய்ச் செடி வளர்ந்துவிடும். இப்படி வளரும் மரங்கள் காய்ப்பதற்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் ஆகும். சொல்லிக் கொள்ளும்படி மகசூலும் இருக்காது. செடி வளரும் நிலையில் அதிக தண்ணீர் கொடுக்கக் கூடாது. தேவையான அளவிற்க்கு மட்டும் காய்ச்சலும், பாய்ச்சலுமாகக் கொடுத்தால் போதும் என்பதில், கவனமாக இருக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை, மரத்துக்கு 10 கிலோ ஆட்டு எரு அல்லது தொழுவுரம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேவையைப் பொறுத்து பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும்.

நெல்லி உறங்கும் நேரம்!
நெல்லி மரத்தை ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதம் பாசனம் செய்யாமல் காயவிட வேண்டும். இதை 'உறங்கும் நிலை’ என்பார்கள். இதுதான் நெல்லி சாகுபடியில் முக்கியமான நுட்பம். அநேக விவசாயிகள், இதை முறையாகச் செய்வதில்லை. நவம்பர் முதல் ஜனவரி கடைசி வரை உள்ள காலத்தில் மரங்களுக்கு எதுவும் கொடுக்காமல் காயவிட வேண்டும். மரம் இலைகளோடு பச்சைப் பசேல் என இருந்தால், பூ பிடிக்காது. இதற்காக சிலர் ரசாயன மருந்துகளைத் தெளித்து இலைகளை கொட்ட செய்வார்கள். இது தவறான முறை. இயற்கையாகவே இலைகள் உதிரும் வரை காத்திருப்பதுதான் நல்லது. இயற்கைச் சுழற்சிக்கு ஏற்ப ஓய்வு கொடுத்தால், மரத்தின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், அதிக மகசூலும் கிடைக்கும். மரங்களை உறங்கும்நிலையில் வைக்கும்போது, இலைகள் உதிர்ந்து, குச்சி திரட்சியாகும். அந்தக் குச்சிகளில் பூக்கள் உருவாகும். இப்படி உருவாகும் பூக்கள், பனியில் உள்ள ஈரத்தில் பெரிதாகும். பூவெடுப்பதில் மூன்று நிலைகள் உள்ளன. சின்னதாக அரும்புகள் தோன்றுவது முதல்நிலை. 2|ம் நிலையில் மலர்ந்து பூவாக இருக்கும். 'செட்டிங்’ என அழைக்கப்படுது மூன்றாவது நிலை. அதாவது, மகரந்தச் சேர்க்கை முடிந்த பிறகு கடுகை விட சிறியதாக கருப்பு நிறத்தில் பூக்கள் குச்சியில் உருவாகியிருக்கும். இதைத்தான் 'செட்டிங்' என்கிறார்கள்.

பார்த்துப் பாத்து செய்ய வேண்டும் பாசனம்!
பூவெடுத்தவுடனே சிலர் பாசனம் செய்வார்கள். அப்படி செய்வது தவறு. 'செட்டிங்' ஆன பிறகுதான் பாசனமே செய்ய வேண்டும். செட்டிங் ஆன பிறகு (பிப்ரவரி முதல் வாரம்), முதலில் மரத்துக்கு வாரம் 10 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். காய் கொஞ்சம் பெருத்து பட்டாணி அளவிற்க்கு வந்ததும் வாரம் 20 லிட்டர், அரை காய் அளவிற்க்கு வந்ததும் 30 லிட்டர் என பாசனநீரின் அளவை சீராக அதிகரிக்க வேண்டும். அதற்குப் பிறகு 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சலாம். செட்டிங் ஆன பூ வெடிப்பதற்கு குளிர்ச்சி தேவை. ஒரு மழையாவது கிடைத்தால்தான் பிஞ்சு உருவாகும். ஏப்ரல் மாதம் நிச்சயம் ஒரு மழையாவது கிடைத்துவிடும். நெல்லி வயலில் இடை உழவு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் அதிக ஆழமாக உழக்கூடாது. அப்படிச் செய்தால், நெல்லியில் அதிகமாக இருக்கும் சல்லி வேர்கள் துண்டிக்கப்படும். காயம்பட்ட வேர்களில் பாக்டீரியா தாக்கி, செடியின் வளர்ச்சியை, பாதிக்கக் காரணமாக அமைந்துவிடும்.

செடியில் காய் நன்றாக பெருத்ததும், குச்சி கீழ் நோக்கி வளையும். இதைத் தவிர்க்க குச்சியில் கடைசி காய்க்கு முன்பாக வெறுமனே உள்ள குச்சியை கவாத்து செய்து விடவேண்டும். இப்படிச் செய்தால் குச்சி வளையாது'' என பயனுள்ள ஆலோசனைகளைச் சொன்னார் ஜெயக்குமார். அத்தனையையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பசும்பொன், ''விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் 'கடனே என்று செஞ்சா கஷ்டந்தான் மிஞ்சும், கடமை என்று நினைச்சு செஞ்சாத்தான் நல்ல மகசூல் எடுக்க முடியும்’ என்பதை நான் அனுபவம் மூலமாக  புரிந்து கொண்டேன்.
சரியான நேரத்துல ஜெயக்குமார் கொடுத்த ஆலோசனையால் நான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இதுவரைக்கும் மரத்தை எப்படியாவது காய்க்க வைக்கணும் என்றுதான் நினைச்சுட்டு இருந்தேன். இனி, 100% மகசூல் எடுப்பதுதான் என்னோட அடுத்த இலக்கு. ஏற்கெனவே இவர் சொன்னதையெல்லாம் சரியாக கடைப்பிடித்ததால், இந்த முறை நல்லாவே பூவெடுத்திருக்கு. மேற்கொண்டும் இப்ப இவர் சொல்லியிருக்கும் எல்லா தொழில்நுட்பங்களையும் தவறாமல் கடைபிடித்து, அடுத்தப் பருவத்துலயே 100% மகசூலை சாதிச்சுடுவேன்'' என்று சபதமாகவே சொன்னார் சந்தோஷமாக!
தொடர்புக்கு,பசும்பொன், செல்போன்: 91504-47270
ஜெயக்குமார், செல்போன்: 98659-25193.

சவுக்கு மூங்கில் பதிமுகம் மலைவேம்பு

கரும்பு, மஞ்சள், தென்னை, வாழை... என்ற பணப்பயிர்கள் பட்டியலில் தற்போது மரப்பயிர்களும் இணைந்து விட்டன. 'விவசாயத்தையே விட்டு விலகலாம்’ என்று நினைப்பவர்களுக்கு மரப்பயிர்கள்தான் வரப்பிரசாதமாக உள்ளன. அதனால்தான் விவரமறிந்த விவசாயிகள், மரப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 'கொங்கு’ குழந்தைசாமி, அவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் அதிகளவில் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவரும்கூட! ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வரும் குழந்தைசாமி, தனது பங்குதாரர்களுடன் சேர்ந்து வாங்கிய தரிசு நிலத்தைப் பண்படுத்தி... பல வகை மரங்கள், கரும்பு, தென்னை... என சாகுபடி செய்து பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளார். கொடிவேறி அணைக்கு அருகில் இருக்கிறது இவர்களுடைய 'ஸ்ரீ முருகவேல் பண்ணை’.

திரும்பிய திசையெல்லாம் சிறியதும், பெரியதுமாக பலவகையான மரங்கள் பசுமை காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் கரும்பு, இன்னொரு புறம் தென்னை என செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, அப்பண்ணை. சவுக்கு மர அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குழந்தைசாமியை சந்தித்தபோது, ''பாரம்பரியமான விவசாயக் குடும்பம் எங்களோடது. ஆனால், விவசாயம் கட்டுப்படியாகாததால், நான் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் இறங்கிட்டேன். இருந்தாலும், 'பெரிய அளவில் லாபகரமாக விவசாயம் செய்யணும்’ என்கிற எண்ணம் எனக்குள்ள ஓடிகிட்டே இருக்கும். அதற்கேற்ற மாதிரியான இடத்தைத் தேடிக்கிட்டிருந்தப்போதுதான் இந்த இடம் அமைந்தது. மொத்தம் 230 ஏக்கர். நாங்க வாங்கும்போது கரடுமுரடாக, ஆடு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாமல் தரிசாக கிடந்தது. கொஞ்சம், கொஞ்சமாக திருத்தி, விவசாயம் பண்ண ஆரம்பித்தோம்.

ஏழு கிலோ மீட்டரிலிருந்து தண்ணீர் !
230 ஏக்கருக்கும் சேர்த்து ஐந்து போர்வெல்லும், ஒரு கிணறும் இருந்தது. அதை வைத்து, முழு நிலத்துலயும் விவசாயம் செய்ய முடியலை. அதனால், ஆரம்பத்தில், 70 ஏக்கரில் கரும்பும், 40 ஏக்கரில் தென்னையும் போட்டோம். அதற்கேற்ற தண்ணீர் பத்தவில்லை. பண்ணைக்கு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கொடிவேறி அணை இருக்கிறது. அதில் இருந்து பிரியும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில் இருந்து, 'கசிவு நீர்ப் பாசனத் திட்டம்’ மூலமாக குழாய் வழியாக தண்ணீர் எடுத்து வந்தோம். அதை சேமித்து வைப்பதற்க்காக 60 லட்சம் லிட்டர் பிடிக்கிற அளவிற்க்கு குளம் வெட்டியிருக்கோம். தண்ணீர் கிடைத்ததும், அடுத்தக் கட்டமாக யோசிச்சப்பதான் 'கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் சங்கம்’ மூலமாக மரம் வளர்க்கறதுக்கான ஆலோசனை கிடைத்தது. 2006-ம் வருடத்தில் இருந்து, பழனி மலை பாதுகாப்பு சங்கத்திலயும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியிலும் கன்னுகளை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நடவு செய்ய ஆரம்பித்தோம்.

80 ஏக்கர் நிலத்தில் 35 ஆயிரம் மரங்கள் !
13 ஏக்கரில் 22 ஆயிரத்து 672 சவுக்கு; ஏழரை ஏக்கரில் 1,044 தைல மரங்கள்; 17 ஏக்கரில் ஆயிரம் பதிமுகம்; 15 ஏக்கரில் 6 ஆயிரத்து 900 மலைவேம்பு; 12 ஏக்கரில் 3 ஆயிரத்து 120 முள்ளில்லா மூங்கில்; 5 ஏக்கரில் 1,280 நாட்டுவாகை; 6 ஏக்கரில் 1,500 மகோகனி; 2 ஏக்கரில் 200 செஞ்சந்தனம்; 1 ஏக்கரில் 200 குமிழ்; ஒன்றரை எக்கரில் 200 பென்சில் மரம் என்று நடவு செய்திருக்கோம். இதுபோக ஊடுபயிராக மரங்களுக்குள்ளாறவும், வரப்பு, வாய்க்கால் என்று மிச்சம் இருக்கும் இடங்களில் எல்லாம் சேர்த்து 50 சிசு, 100 ஈட்டி, 200 குமிழ், 50 பாப்புலர் (பிளைவுட் தயாரிக்க பயன்படும்), 10 சந்தனம், 5 ஒளிவேறி மரம் என்று 15 வகையான மரங்கள் நட்டிருக்கிறோம். மொத்தத்தில் 80 ஏக்கரில் 38 ஆயிரம் மரங்களுக்கு மேல் இருக்கு. எல்லாத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்'' என்றார்.

தண்ணீர் கண்டிப்பாகத் தேவை !
''மரம் சாகுபடிக்கு தண்ணீர் தேவையில்லை என்றுதான் நிறைய பேர் நினைக்கறாங்க. ஆனால், அது தப்பு. தண்ணீர் இல்லாமல் மரம் வளர்க்கவே முடியாது. எந்த மரமாக இருந்தாலும், கண்டிப்பாக ஐந்து வருடம் வரைக்கும் தண்ணீர் கொடுக்கணும். 'மழையை மட்டும் நம்பி வளர்க்கலாம்’ என்று நினைத்தால், எதிர்பாக்கும் மகசூல் எடுக்க முடியாது. கேரளாவில் வருடத்திற்க்கு ஒன்பது மாதம் மழை பெய்யும். அதனால் அங்கு வேண்டுமானால்  தண்ணீர் பாய்ச்சாமல் மரம் வளர்க்க முடியும். தமிழ்நாட்டில் முடியவே முடியாது.

சொட்டு நீர்ப் பாசனம் நல்லது !
நாங்க, ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை, அதாவது பருவ மழை ஆரம்பிக்கறதுக்கு முன், ஒவ்வொரு மரத்திற்க்கும் மூன்று கிலோ ஆட்டு எரு அல்லது ஒரு கிலோ கோழி எரு கொடுத்துடுவோம். அதோட மரத்தில் இருந்து உதிரும் இலைகளும் மட்கி உரமாயிடும். வருடத்திற்க்கு ஒரு முறை மரங்களைக் கவாத்து பண்ணிடுவோம். ஓரளவுக்கு மரம் வளர்ந்ததுக்கு பிறகு கவாத்து செய்வதை நிறுத்திடுவோம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர் முறையில் மரங்கள் நன்றாக வளர்கிறது''
650 டன் சவுக்கு, 300 டன் தைல மரம் !
''இப்போ, சவுக்கு, தைல மரங்களை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கோம். சவுக்கு மரம் டன் 2 ஆயிரத்து 500 ரூபாய் என்று விலை பேசி 50 டன் வரை விற்றிருக்கிறோம். ஏக்கருக்கு சராசரியாக 50 டன் மகசூல் கிடைக்கிறது. மொத்தம் 13 ஏக்கரிலும் சேர்த்து 650 டன் மரம் கிடைக்கும். அதை விற்கும்போது, 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தைல மரத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கிறது. ஏழரை ஏக்கரில் 300 டன் மரத்திற்க்கு மேல் கிடைக்கும். இப்போது ஒரு டன் 2 ஆயிரத்து 50 ரூபாய் என்று பேப்பர் மில்காரங்க எடுக்கறாங்க. இது மூலமாக 300 டன் மரத்திற்க்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மலைவேம்பில் 50 லட்சம் !
மூங்கிலும், மலைவேம்பும் அறுவடைக்குத் தயாராக இருக்கு. மூங்கிலில் ஏக்கருக்கு சராசரியாக 12 டன் கணக்கில் 12 ஏக்கருக்கும் சேர்த்து 144 டன் மரம் கிடைக்கும். 1 டன் குறைந்தது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்க்கும். அந்தக் கணக்கில், 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும். மலைவேம்பில், ஏக்கருக்கு சராசரியாக 1,600 கன அடி மரம் கிடைக்கும். 13 ஏக்கரில் இருந்து குறைந்தது 20 ஆயிரம் கன அடி மரம் கிடைக்கும். ஒரு கன அடி 250 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே, மொத்தம் 50 லட்ச ரூபாய் கிடைத்துவிடும்.

உத்தேசக் கணக்கல்ல... உண்மைக் கணக்கு !
அடுத்த வருட ம் பதிமுகத்தை அறுவடை செய்யலாம். எப்படியும் ஏக்கருக்கு 5 டன்னுக்குக் குறையாமல் கிடைக்கும். 17 ஏக்கரில் இருந்து 85 டன் வரைக்கும் மரம் கிடைக்கும். ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கிட்டாலே, 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மற்ற மரங்கள் எல்லாம் அறுவடைக்கு வர இன்னும் நாள் ஆகும். அதனால் அந்தக் கணக்கையெல்லாம் இப்போது பார்க்க வேண்டாம். கண்ணு முன்னால் விளைந்து, விற்பனையாகிட்டு இருக்கறதை மட்டும் வைத்து கணக்குப் போட்டாலே... மொத்தம் 80 ஏக்கரில் இருந்து, ஒரு கோடியே 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் சொட்டு நீர் அமைப்பு போடுவதற்க்காக 20 லட்ச ரூபாய் செலவாச்சு. அதன்பிறகு, உரம் வைப்பது, கவாத்து பண்றது, பராமரிப்பு...என்று இந்த ஐந்து வருடத்தில் மொத்தம் 36 லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. இதைக் கழித்தால், 83 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிகர லாபம். நான் உத்தேசமாக பேப்பரில் கணக்குப் போட்டுச் சொல்லலை. இப்போது, நேரடியாக பார்க்க முடியும். இனிமேல் மற்ற மரங்களுக்கு உரம் வைக்கிறது, பராமரிப்பு மட்டும்தான் செலவு. கவாத்து பண்ண வேண்டியிருக்காது. அதனால் அதையெல்லாம் அறுவடை பண்ணும் போது இன்னும் அதிக லாபம் கிடைக்கும். 'அதிக விலை கிடைக்குதே'னு நிலத்தை விக்க ஆசைப்படாம, மரங்களை வெச்சு விட்டா... அந்த நிலத்தோட மதிப்பைவிட அதிகமான வருமானத்தை மரம் கொடுத்துடும். மரம் என்னிக்கும் விவசாயிகளை ஏமாத்தவே ஏமாத்தாது'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்ன குழந்தைசாமி...

இனம் காக்கும் வனம் !
''நாங்க வியாபார நோக்கத்துலதான் மர சாகுபடியை ஆரம்பிச்சோம்.ஆனா, அதுக்கப்பறம் 'பசுமை விகடன்’ மூலமாவும், மரங்கள் பத்தின கருத்தரங்குகள் மூலமாவும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுல எங்களுக்கு விழிப்பு உணர்வு கிடைச்சிருக்கு.வருமானம் கிடைக்கறது இல்லாம, புவி வெப்பம் குறைத்தல், மழை ஈர்ப்பு, பல்லுயிர் பெருக்கம்னு மனிதகுலத்தை வாழ வைக்கறதுக்கு நாங்களும் கொஞ்சம் பங்களிக்கிறோம்கிறது எங்களுக்குப் பெருமையான விஷயம்.அதனால, கடம்பு, தேக்கு, வேங்கை, பூவரசன் மாதிரியான நாட்டுமரங்களை நடவு செஞ்சு 'அழியா வனம்’ உருவாக்குறத் திட்டமும் வெச்சுருக்கோம்'' என்றபடி விடை கொடுத்தார். சிலுசிலுக்கும் பசுமையை நுகர்ந்தபடியே புறப்பட்டோம்!

தொடர்புக்கு
'கொங்கு’ குழந்தைசாமி,
செல்போன்:  98427-43535.

இங்கே..லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

'பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு' என்று வெளிநாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதை அப்படியே, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது... காற்றாலை நிறுவனம் ஒன்று!ஆம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக... அன்பு, ஆதரவு, சொந்தம், பந்தம் எல்லாம் ஓடி விட... அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு, இலவசமாக நிலத்தைக் கொடுத்து, விவசாயப் பயிற்சியையும் கொடுத்து வருகிறது, 'சுஸ்லான்’ காற்றாலை நிறுவனம். கிடைத்த நிலத்தில் அசத்தலாக இயற்கை விவசாயம் செய்து, லாபத்தையும் சந்தோஷத்தையும் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்... அந்தப் பெண்கள்! திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து முடவன்குளம் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, நெடுவாழி கிராமம். இங்கேதான் இருக்கிறது அந்தப் பெண்கள் நடத்தி வரும் இயற்கை விவசாயப் பண்ணை. பணிகளில் மும்முரமாக இருந்த பெண்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள... உற்சாகமாய் பேச ஆரம்பித்தார், அவர்களுடைய நலச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவி முகில். இவர், 'வி ஃபார்ம்’ மகளிர் குழு'வுக்கும் தலைவியாக உள்ளார்.

இயற்கை நிபந்தனை!
''பாம்பன்குளம்தான் சொந்த ஊர். திருநெல்வேலி மாவட்ட சங்கத்தில் ஐநூறு பேருக்கு மேல் உறுப்பினர்கள் இருக்காங்க. எங்களை அறியாமலேயே எங்க வீட்டுக்காரங்க மூலமாக எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகிட்டவங்கதான் நாங்க. எங்களில் நிறைய பேர், தோட்டம், துரவு, ஆடு, மாடு என்று வசதியாக வாழ்ந்தவங்கதான். விதிவசத்தால் இன்னிக்கு நிராதரவாகிட்டோம். சுஸ்லான் கம்பெனிதான் எங்களுக்கு கடவுளாக உதவி செய்துட்டிருக்கு.

அவங்க கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்வதற்க்காக 'வி ஃபார்ம்’னு குழு ஆரம்பிச்சுருக்கோம். 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத இயற்கை விவசாயம் செய்யணும்' என்று ஒரே ஒரு கண்டிஷன் போட்ட அந்த நிறுவனம், இயற்கை விவசாயப் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. அப்படித்தான் எங்களுக்கு இயற்கை விவசாயம் அறிமுகம். இப்போ முழுநேரமும் விவசாயம் பாக்கறதால், நோய் பத்தின கவலையெல்லாம் மறந்து, சந்தோஷமாக நகர்ந்திட்டிருக்கு எங்களோட நாட்கள்'' என்று தெம்பாகச் சொன்ன முகில் தொடர்ந்தார்.

ஏழு ஏக்கர்... ஏழு பயிர்!
''மொத்தம் ஏழு ஏக்கர் பூமி. அதில், இரண்டு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்; ஒன்றரை ஏக்கர்ல மரவள்ளிக் கிழங்கு; இரண்டு ஏக்கரில் வாழைன என்று சாகுபடி பண்றோம். இதுபோக, ஒன்றரை ஏக்கரில் 118 தென்னை மரங்கள் நிற்கிறது. தென்னை மரங்களுக்கு 20 வயசாகிறது. 18 அடி இடைவெளியில் மரங்கள் இருப்பதால், அரை ஏக்கரில் சின்ன வெங்காயம், அரை ஏக்கரில் வெள்ளரி, அரை ஏக்கரில் பாகற்காய் என்று ஊடுபயிர் சாகுபடியும் பண்றோம். 'பருவத்துக்கு ஏத்த மாதிரி பயிர் செய்தால்தான் லாபம் பார்க்க முடியும்' என்று சொல்வாங்க. எங்களுக்கு ஒவ்வொரு பருவத்துலயும் என்ன பயிருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று சுஸ்லான் கம்பெனிக்காரங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதன்படி கடந்த முறை செஞ்சப்போ... தக்காளி, நிலக்கடலை இது இரண்டிலும் நல்ல வருமானம் கிடைத்தது. நாங்க இப்போ ஆறு மாதத்தில் விளைஞ்சுடுற 'லெட்சுமி’ ரக வெள்ளை மரவள்ளிக்கிழங்கு நடவு செய்திருக்கோம்'' என்ற முகிலைத் தொடர்ந்தார்... வி ஃபார்ம் மகளிர் குழுவின் செயலாளர் சாவித்திரி.

மனசு நிறைய சந்தோஷம்!
''முழுக்க இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். தொழுவுரம், நுண்ணுயிர் திரவம்னுதான் பயன்படுத்துறோம். இயற்கை விவசாயங்கிறதால்  பூச்சிகள் வருவதில்லை. நோயும் தாக்குவதில்லை. ஊடுபயிராக போட்டிருக்கும் வெள்ளரி, இப்போ காய்ப்புக்குத் தயாராக இருக்கு. சின்னவெங்காயமும், பாகற்காயும் சீக்கிரம் காய்ப்புக்கு வந்துவிடும். வாழை இன்னமும் அறுவடை செய்யவில்லை. முதல் முறை காய் பறித்ததில் 400 கிலோ வெள்ளரி எடுத்தோம். கிலோ 20 ரூபாய் என்று விற்றதில் 8,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. இன்னமும் காய் பறிக்கலாம். விவசாயம் மூலமாக எங்களுக்கு வருமானம் கிடைப்பதை விட, மனசு நிறைய சந்தோஷம் கிடைத்திருக்கு.

பெண்களின் உழைப்புதான் காரணம்!
சுஸ்லான் நிறுவனத்தின் மக்கள் நலப்பணி ஒருங்கிணைப்பாளர் முருகன், ''எங்களின் ஃபவுண்டேசன் மூலமாகவும், காற்றாலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் பங்களிப்போடும் பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புப் பயிற்சிகள், கிராம சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைப் பயிற்சிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விவசாயிகளுக்கு இடுபொருள் செலவைக் குறைத்து, இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம்.

கால்நடை பராமரிப்பு, அறுவடைக்குப் பிந்தையத் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல்... என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். 'வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைப் பிடிப்போடு, துடிப்போடு இருக்கும் இந்தப் பெண்கள், அதையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். நாங்கள் வெறுமனே வடிவம்தான் கொடுத்தோம். இவர்களின் கடின உழைப்பால்தான் இந்தப்பகுதி, இத்தனை செழிப்பாக மாறியிருக்கிறது'' என்று வஞ்சனையில்லாமல் பாராட்டினார் அந்தப் பெண்களை! 'சாகற நாள் தெரிஞ்சுட்டா... வாழற நாள் நரகமாயிடும்' என்பார்கள். கிட்டத்தட்ட இப்படியொரு நிலைதான் இந்தப் பெண்களுக்கு. ஆனால், இவர்களின் நாட்கள், 'நரகம்' என்றெல்லாம் ஆகாமல், இயற்கையின் மகிமையால் 'பசுமை'யாகவே இருப்பது... ஆறுதலான விஷயம்தானே!

தொடர்புக்கு

முகில், செல்போன்: 98652-98500.
முருகன், செல்போன்: 98430-84844

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக